பாரிய நிதி மோசடிகளைத் தடுப்பது தொடர்பான விசேட பொலிஸ் குழு (எப்.சி.ஐ.டி) தன்னிடமுள்ள சாட்சியங்களின் அடிப்படையில் இதுவரை நடவடிக்கை எடுத்திருந்தால் பாராளுமன்றத்திலுள்ள பலர் சிறைகளிலேயே இருந்திருப்பார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றஞ்சாட்டினார்.
தவறிழைத்தவர்களைத் தண்டிக்கும் நிறுவனமாக அன்றி, மோசடிகள் பற்றிய தகவல்களைத் திரட்டும் நிறுவனமாகவே செயற்படுவதாக இது செயற்பட்டு வருகிறது. எப்.சி.ஐ.டியில் போதியளவு சாட்சியங்கள் இருந்தாலும் குற்றமிழைத்தவர்கள் சுதந்திரமாக நடமாடித் திரிகின்றனர் என்றும் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், பாரிய நிதி மோசடிகள், அரச சொத்துக்கள் எவ்வாறு தனியார் மயப்படுத்தப்பட்டன என்ற முறைப்பாடுகள் மற்றும் தவல்கள் உள்ளன. இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றம் சென்றிருந்தால் பாராளுமன்றத்தில் பலர் சிறையில் இருக்கும் நிலைமையே காணப்படும். உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாதுள்ளது.
பாரிய நிதிமோசடிப் பிரிவு வெறும் தகவல் திரட்டும் நிறுவனமாகவே உள்ளது. தவறிழைத்தவர்களைத் தண்டிக்கும் நிறுவனமாகக் காணப்படவில்லை. பல முறைப்பாடுகளுக்கு எதிராக சரியான சாட்சியங்கள் இருக்கின்றபோதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
(ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்)
No comments:
Post a Comment