எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மாநகரை அழகுபடுத்தும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் விசேட திட்டத்திற்கமைய மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் மட்டக்களப்பு நகரிலில் சுமார் ஆறரை கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தனியார் பேரூந்து நிலைய புதிய கட்டடத்தொகுதி எதிர்வரும் 12ஆம் திகதி காலை 10 மணிக்கு மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
இதுவரை காலமும் வசதிகளின்றி பல்வேறு அசௌகாரியங்களுக்கு மத்தியில் செயற்பட்டு வந்த இத்தனியார் பேரூந்து நிலையத்தின் தேவை உணரப்பட்டு, ரணில் விக்ரமசிங்கவிடம் விடுத்த விசேட பணிப்புரைக்கமைய மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தியமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் அங்கீகாரத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் புதிய கட்டடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த தனியார் பேரூந்து நிலையத்தின் புதிய கட்டடத்தொகுதியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வுகளின் ஏற்பாடுகள் பற்றி திட்டமிடும் விசேட கூட்டம் கடந்த 02ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவான் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தியமைச்சின் மக்கள் தொடர்பு உத்தியோகத்தர் மகேந்திர ஜெயசிங்க, காணிப்பிரிவு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூப ரஞ்சனி முகுந்தன், திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.லிங்கராசா, நகர அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு பணிப்பாளர் எந்திரி ஏ.எம்.நாசர் உட்பட பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.
No comments:
Post a Comment