மாணவர்கள் பாடவிதானங்களில் சிறப்பு தேர்ச்சி பெறுவதைப் போன்றே சிறந்த பிரஜைகளாக உருவாகவும் ஆசிரியர்கள் கவனஞ் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
மாணவர்களின் எதிர்காலம் ஆசிரியர்களினாலேயே தீர்மானிக்கப்படுவதுடன், அவர்கள் தொடர்பான தீர்மானங்களை ஆழமான புரிந்துணர்வுடனும் மனிதாபிமானத்துடனும் மேற்கொள்ள வேண்டுமென இன்று (02) கொழும்பு இலங்கை மன்றத்தில் இடம்பெற்ற மேல் மாகாண ஆசிரியர் நியமனங்களை வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்ற மேல் மாகாண ஆசிரியர் சேவையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சையில் தோற்றிய 15,000 விண்ணப்பதாரிகளுள் முதலாம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 587 பேருக்கு இவ்வாறு இன்று ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.
இந்த வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, கற்றறிந்த சமூகமொன்றை உருவாக்கி அனைவருக்கும் சமமான வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்து சமூக சமனிலையை உறுதிப்படுத்துவதே அரசின் நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.
ஆசிரியர் சேவையின் ஆளுமை, நம்பிக்கை, இருப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்கு தொழிநுட்ப யுகம் பற்றிய தமது அறிவையும் ஆசிரியர்கள் இற்றைப்படுத்திக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
ஆசிரியர் நியமனம் வழங்குதலை அடையாளப்படுத்தும் வகையில் 10 பேருக்கு ஜனாதிபதி நியமனக் கடிதங்களை வழங்கினார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் லசந்த அழகியவன்ன, திலங்க சுமதிபால, மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.எல். முஸம்மில், இசுரு தேவப்பிரிய, காமினி திலக்கசிறி, ரஞ்சித் சோமவங்ச ஆகிய மக்கள் பிரதிநிதிகளும், மேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.ஜீ. விஜயபந்து மற்றும் மேல் மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த வைபவத்தில் பங்குபற்றினர்.
No comments:
Post a Comment