இந்நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் "நாம் இலங்கையர்" என ஒன்றிணைந்து ஒற்றுமையாய் கைகோர்க்க முன்வர வேண்டுமென, ஸ்ரீல.பொ.பெ. மத்திய கொழும்பு அமைப்பாளரும், கொழும்பு மாவட்ட முஸ்லிம் அமைப்பாளருமான அல்ஹாஜ் ஏ.எல்.எம். உவைஸ் தெரிவித்தார்.
கொழும்பு, மருதானையிலுள்ள ஸ்ரீல.பொ.பெ. வின் மத்திய கொழும்பு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, உவைஸ் ஹாஜியார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"அரசியல் களங்களின் சமகாலப் பார்வை" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அவர் மேலும் பேசும்போது கூறியதாவது,
இந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இது வெளிப்படையான உண்மை. இதுகாலவரைக்கும் மக்கள் வாக்களித்து அரசாங்கத்தை ஸ்தாபித்துள்ளனர். ஆனால், இனிவரும் காலங்களில், "நாட்டின் பிரஜைகள்" என்ற அடிப்படையில் ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும்.
நாட்டின் நலன் கருதி, இந்நாட்டில் வாழும் சகல மக்களினதும் கருத்துக்களைப் பெற்று, மிகச் சிறந்த எதிர்காலத் திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். அத்துடன், மேலும் பல பயனுள்ள திட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளோம்.
எனவே, எம்முடன் இணைந்து கை கோர்க்குமாறு, அரசின் பங்காளிக் கட்சிகள் உள்ளிட்ட சகல தொழிற் சங்கங்களுக்கும், தொழில் வல்லுனர்களுக்கும் அன்பு அழைப்பு விடுக்கின்றோம்.
நாட்டில் சமூக மாற்றத்தைக் காண வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால், முதலில் அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். தற்போது மக்கள் அரசியல் மாற்றம் ஒன்றையே விரும்பியும் வேண்டியும் நிற்கின்றார்கள்.
இனவாதம், மதவாதம் இந்நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும். இதனை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
எதிர்காலத்தில் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொள்ள, மத்திய கொழும்பை நான் தெரிவு செய்துள்ளேன். காரணம், மத்திய கொழும்பு மக்கள் பல தசாப்தங்களாக ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களித்து வந்துள்ளனர். என்றாலும், முஸ்லிம்களுக்கு நன்மை பயக்கும் செயற்பாடுகள் எதுவும் இக்கட்சியால் மேற்கொள்ளப்படவில்லை. இதனால்தான், பொதுஜன பெரமுனவில் இணைந்து, கொழும்பு வாழ் மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளத் தீர்மானித்தேன்.
எனவேதான், மத்திய கொழும்பை, பொதுஜன பெரமுனவின் கோட்டையாக மாற்றுவதற்கான மிகச்சிறந்த எண்ணக் கருவைப் பின்னணியாகக் கொண்டு செயற்பட உறுதி பூண்டுள்ளேன் என்றார்.
இந் நிகழ்வில், உலமாக் கட்சித் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத், புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் உள்ளிட்ட புத்திஜீவிகள் பலரும் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.
ஐ.ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment