எஸ்.எம்.எம்.முர்ஷித்
கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரி ஜப்பார் திடல் இத்தியடிப் பிள்ளையார் ஆலய சுற்றுமதில் தூண்கள் சில விஷமிகளால் சேதமாக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என கோறளைப் பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் வை.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஓட்டமாவடி பிரதே சபையின் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் இன நல்லுறவுக்கு உதாரணமாக எமது ஓட்டமாவடி பிரதேச சபை காணப்படுகின்றது. இவ்வாறானதொரு பிரதேசத்தில் இவ்வாறான செயற்பாடு இடம்பெறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன், வணக்கஸ்தலங்கள் மதிக்கப்படுவதுடன், பாதுகாக்கப்படவும் வேண்டும். அந்த வகையில் குறித்த ஆலய சுற்றுமதில் தூண்களை சேதப்படுத்தியவர்கள் இதுவரை கைது செய்யப்படாமை கவலையளிக்கின்றது.
இனந்தெரியாத நபர்கள் என்ற போர்வையில் சட்டம் மறைந்து கொள்வது தவிர்க்கப்பட்டு சம்பந்தப்பட்ட தரப்பினர் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
இன நிம்மதியை குழப்பும் நோக்கில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டோர் கைது செய்யப்படுவதுடன், இனி மேலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சமாதானம், சக வாழ்வு தொடர்பில் இனங்களுக்கிடையில் விழிப்புணர்வை ஏற்படுத்த சபை முன்வர வேண்டியது அவசியமாகின்றது. அதற்கான நல்லதொரு சந்தர்ப்பமாக இது காணப்படுகின்றது.
ஆகவே இன ரீதியாகவோ, பக்கச்சார்பாகவோ நடக்காமல் நீதியாக நடந்து இவ்வாறான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment