ஜப்பார்திடல் முஸ்லிம்களின் பூர்வீகமும் வரலாறும் கிரான் பிரதேச செயலகத்தால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது - பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.எம்.ஜௌபர் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 1, 2019

ஜப்பார்திடல் முஸ்லிம்களின் பூர்வீகமும் வரலாறும் கிரான் பிரதேச செயலகத்தால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது - பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.எம்.ஜௌபர்

எஸ்.எம்.எம்.முர்ஷித்
ஜப்பார்திடல் முஸ்லிம்களின் பூர்வீகமும் வரலாறும் கிரான் பிரதேச செயலகத்தால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.எம்.ஜௌபர் தெரிவித்தார்.

சபையின் 17வது அமர்வு பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் ஜப்பார்திடல் எனும் பிரதேசத்திற்கும் காவத்தமுனைக்கும் மிகவும் நெருங்கிய தொடர்புண்டு. 1956ஆம் ஆண்டளவில் காணிக்கான உரித்துப்படிவம் வழங்கப்பட்டிருந்தாலும் அதற்கு முற்பட்ட காலத்தில் அங்கு வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன.

அதற்கான ஆதாரங்கள் கொழும்பில் உள்ள போதும் கிரான் பிரதேச செயலகத்தில் இல்லாமலாக்கப்பட்டுள்ளது. ஜப்பார்திடல் முஸ்லிம்களின் பூர்வீகமும் வரலாறும் கிரான் பிரதேச செயலகத்தால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது.

சுமார் அண்மைய காலங்களிலே முஸ்லிம்களின் காணியிலிருந்தே கோயிலுக்கு காணி வழங்கப்பட்டுள்ளது. அது படிப்படியாக விஸ்தரிக்கப்பட்டு தற்போது முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணி மேலும் நாற்பது பேர்ச் அடாத்தாக பிடிக்கப்பட்டு கோயிலுக்கு சுற்றுமதில் அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு கிரான் பிரதேச செயலாளரும் ஏனைய அதிகாரிகளும் துணை போயுள்ளனர். ஜப்பார்திடல் முஸ்லிகளின் பூர்வீகங்களை அழிப்பதில் கிரான் பிரதேச செயலகமும் அதிகாரிகளும் முன்னின்று செயற்பட்டுள்ளனர்.

அதே நேரம் ஜப்பார்திடல் சம்பவம் இன விரிசலை உண்டு பண்ணும் நோக்கில் ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைச்செய்தவர்கள் யார் என்பது சகலருக்கும் தெரிந்த விடயம்.

கோயில் விஸ்தரிப்புக்கு யாரது அனுமதியோ சம்மதமோ பெறப்படாமல் தத்துணிவில் தனியார் காணியை அபகரித்து வழங்கியுள்ள பிரதேச செயலாளரும் அதிகாரிகளும் அப்பிரதேசத்திலுள்ள பள்ளிவாயல் புனர்நிர்மானம் மற்றும் வேலி அமைப்பதற்கு, பதிவு செய்வதற்கு தடை விதித்துள்ளார்கள்.

இதனடிப்படையில் நோக்குகின்ற போது எமது பூர்வீகக் காணிகளை பற்றி பேசும் நான் இனவாதியா? அல்லது குறித்த பிரதேச செயலாளர் இனவாதியா? அல்லது நிருவாக செயற்பாடுகளுக்கு தடைவிதிக்கும் பிரதேச செயலகம் இனப்பாகுபாட்டுடன் செயற்படுகின்றதா? உரிமைகள் என வருகின்ற போது நாம் விட்டுக்கொடுத்து செயற்பட முடியாது.

ஆகவே இரு இனங்களுக்கிடையிலும் முரண்பாடுகள் இல்லாது முன்னர் வழங்கப்பட்ட நாற்பது பேர்ச் காணியில் அவர்கள் கோயில் விஸ்தரிப்பை செய்து கொள்ளட்டும். அதற்கு சபையும் ஒத்துழைக்க வேண்டும் என்பதுடன், அதையும் மீறி என்பது பேர்ச் என்ற அடிப்படையில் தமது செயற்பாடுகளை இவர்கள் முன்னெடுப்பார்களாக இருந்தால் முற்று முழுதாக நான் அதை எதிர்ப்பேன் என்பதையும், அநீதிக்கு ஒரு போதும் துணை போகமாட்டேன் என்பதையும் ஆணித்தரமாக கூறிக்கொள்கின்றேன் என கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.எம்.ஜௌபர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment