வாகனேரி பகுதியில் பாரிய பிரச்சனை ஏற்படவில்லை, ஆனால் சில அரசியல்வாதிகள் இதனை ஒரு பாரிய பூதாகரமான பிரச்சனையாக காட்ட முயல்கின்றனர் - அமைச்சர் அமீர் அலி - News View

About Us

About Us

Breaking

Sunday, September 1, 2019

வாகனேரி பகுதியில் பாரிய பிரச்சனை ஏற்படவில்லை, ஆனால் சில அரசியல்வாதிகள் இதனை ஒரு பாரிய பூதாகரமான பிரச்சனையாக காட்ட முயல்கின்றனர் - அமைச்சர் அமீர் அலி

எஸ்.எம்.எம்.முர்ஷித்
வாகனேரி பகுதியில் பாரிய பிரச்சனை ஏற்படவில்லை. ஆனால் சில அரசியல்வாதிகள் இதனை ஒரு பாரிய பூதாகரமான பிரச்சனையாக காட்ட முயல்வது என்பது கவலைக்குரிய விடயமாகும் என விவசாயஇ நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரி ஜப்பார் திடல் பகுதியில் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் அப்பகுதிக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் வாகனேரி ஜப்பார் திடல் பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம் சமூகத்தினருக்கு இடையில் பிரச்சனை வரக்கூடிய நிலை இருந்து தற்போது தவிர்க்கப்பட்டுள்ளது. 
இங்கு நிர்மானிக்கப்பட்டிருக்கும் பிள்ளையார் ஆலயத்தின் நாற்பது பேர்ச் காணியை கிரான் பிரதேச செயலகம் என்பது பேர்ச் காணியாக வழங்கியதன் காரணமாக அருகிலுள்ள முஸ்லிம் தரப்பினர் எங்களுடைய காணி அதனை வழங்க முடியாது என்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களாக சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன் ஆகியோரிடம் குறித்த விடயத்தினை கொண்டு வந்தேன். இதில் பொதுவான இணங்கப்பாடு காண்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பு.

இதிலே வாகனேரி ஜப்பார் திடல் பிரதேசத்தில் இருக்கும் தமிழ், முஸ்லிம் இரண்டு சமூகத்தினரும் சந்தோசமாக வாழ வேண்டும் என்று தான் நான் எதிர்பார்க்கின்றேன். வெளி இடங்களில் இருந்து வரும் தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் வேறு சிலர் இதனை குழப்ப வேண்டும் என்று வந்து இதில் தலையிட வேண்டாம்.
சமூகம் ஒன்றாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் பாராளுமன்ற உறுப்பினர்களாக சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன் ஆகியோருடன் நானும் இணைந்து ஒரு சுமுகமான தீர்வினை மேற்கொள்வதற்கான முனைப்புக்களை மேற்கொண்டிருக்கின்றோம்.

எதிர்வரும் காலங்களில் குறித்த பிரச்சனை முடிவுக்கு கொண்டுவரப்படும். குறித்த விடயம் தொடர்பில் ஓட்டமாவடி பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்களுடன் பேசி இதனை சுமுகமாக தீர்த்துக் கொள்ளும் வகையில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது.

வாகனேரி பகுதியில் பாரிய பிரச்சனை ஏற்படவில்லை. ஆனால் சில அரசியல்வாதிகள் இதனை ஒரு பாரிய பூதாகரமான பிரச்சனையாக இந்த நாட்டுக்கும், எமது பிரதேசத்திற்கும், மாவட்டத்திற்கும் காட்ட முயல்வது என்பது கவலைக்குரிய விடயம்.
இதனை நாங்கள் சரியான முறையில் அரசியல் தலைவர்கள் தீர்த்துக் கொடுப்பதற்கு முயற்சிப்போம் என்று அவர்களுக்கு கூறிக் கொள்கின்றேன். இதில் இரண்டு சமூகங்களையும் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கின்ற அரசியலை யாரும் செய்ய வேண்டாம் என்று மண்டாட்டமாக கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

வாகனேரி இத்தியடி விநாயகர் ஆலய விஜயத்தின் போது ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், சபை உறுப்பினர்களான எஸ்.கிருபாகரன், எம்.ஜௌபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment