சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்பவர்கள் அங்கு நுழைவதற்கோ அங்கு வசிப்பதற்கோ அல்லது தொழில் புரிவதற்கோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். கடல் வழியாக சட்டவிரோத பயணத்துக்கு முயற்சிப்பதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்ட ரீதியாக புலம் பெயர்வதற்கு அவர்களுக்குள்ள ஏதேனும் வாய்ப்பும் சுயமாகவே இழக்கப்பட்டுவிடுமென சட்டவிரோத புலம் பெயர்தலைத் தடுக்கும் அவுஸ்திரேலிய அரசின் நடவடிக்கை தலைவர் மேஜர் ஜெனரல் கிரைக் புரூணி தெரிவித்தார்.
கடந்த மே மாதம் இரண்டு படகுகளில் கைது செய்யப்பட்ட 25 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
கடல் வழியாக சட்டவிரோத புலம் பெயர்தலைத் தடுக்கும் அவுஸ்திரேலிய அரசின் நடவடிக்கை தலைவர் மேஜர் ஜெனரல் கிரைக் புரூணி, நேற்று நீர்கொழும்பு பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொண்டு நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தில் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தினார். இதன்போதே அவர் திட்டவட்டமாக இதனை அறிவித்தார்.
இந் நிகழ்வில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி மற்றும் இலங்கை கடற்படையின் நடவடிக்கை பணிப்பாளர் ரியர் அட்மிரல் என்.பி.எஸ் ஆட்டிகல (Director Operation Rear Admiral N.P.S Attygalle) ஆகியோரும் கலந்துகொண்டனர்.
படகுகள் மூலம் சட்டவிரோதமாகப் புலம் பெயர்வதனால் ஏற்படும் ஆபத்துக்கள் மற்றும் நீண்டகால பின்விளைவுகள் தொடர்பாக எச்சரிக்கை செய்வதற்கான முயற்சிகளில் இலங்கையர் அனைவரும் தம்முடன் இணைந்து கொள்ள வேண்டுமென்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
2013ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலியா, இலங்கையுடன் இணைந்து 12 ஆட்கடத்தல் படகிலிருந்து 204 இலங்கையரை திருப்பி அனுப்பி வைத்துள்ளது. எந்த ஒரு இலங்கையரும் அவுஸ்திரலியாவுக்கான படகு பயணத்தில் வெற்றி பெறவில்லை என அவுஸ்திரேலியாவின் செயற்பாட்டு இறைமை, நாட்டு எல்லைக்கான பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் கிரைக் புரூணி தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்துடன் அவுஸ்திரேலியா ஒரு வலுவான மற்றும் பயனுள்ள உறவைப்பேணி வருகிறது. நாம் ஆட்கடத்தலுக்கு எதிராக போராடுவதற்கும், ஆட்கடத்தல்காரர்கள் இலக்கு வைக்கும் பாதிக்கக்கூடிய நபர்களுக்கும் விழிப்பூட்டுவதற்கும் மற்றும் கடலில் மக்கள் இறப்பது போன்ற செயல்களை தடுத்து நிறுத்துவதற்கும் ஒன்றிணைத்து பணிபுரிகின்றோம் என்றும் மேஜர் ஜெனரல் புரூண்டி குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment