"ஜனாதிபதித் தேர்தலை பிற்போடும் வகையிலும் அதனை இல்லாமல் செய்யவுமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு என்கின்ற துருப்புச் சீட்டைக் கையில் எடுத்துள்ளார். இதற்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் ஆதரவு வழங்கக் கூடும்."
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தமை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
புதிய அரசமைப்பு முயற்சி முடங்கிய நிலையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் தனிநபர் சட்டவரைவை மக்கள் விடுதலை முன்னணி தனிநபர் தீர்மானமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. இருப்பினும் அந்தக் கட்சி இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றது. இவ்வாறானதொரு நிலையிலேயே அந்தக் கட்சியின் தலைவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது "கடந்த ஆண்டு நடைபெற்ற 'ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சிக்குப் பின்னர் நாடாளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் கேள்விக்குறியாகிவிட்டது. அதன் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படாது என்பதால்தான், இந்த ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் தனித்துக் களமிறங்கியுள்ளோம்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மஹிந்த, மைத்திரி, ரணில் அணிகளிடையே குழப்பங்கள் இருக்கின்றன. தேர்தலில் தோல்வியைச் சந்திப்போமோ என்று மூன்று அணிகளும் அச்சத்தில் இருக்கின்றன. தேர்தலைப் பிற்போடும் வகையிலும், தேர்தலை இல்லாமல் செய்யும் வகையிலும் இந்தத் துரும்பை மைத்திரிபால கையில் எடுத்துள்ளார்.
ரணிலும் இதற்கு மறைமுக ஆதரவு வழங்குவார் போன்று தென்படுகின்றது. மஹிந்தவும் ஆதரவு வழங்கக் கூடும். ஆனால், சிறுபான்மைக் கட்சிகள் ஆதரவு வழங்குவது கேள்விக்குறியே.
எனவே, மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் எடுப்பது கடினம். அதேவேளை, இது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்த வேண்டும். இது காலத்தை இழுத்தடிக்கும் செயல். ஜனாதிபதித் தேர்தலையும், நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்திய பின்னர் இந்த இரண்டு விடயங்களையும் முன்னெடுக்க முடியும்" - என்றார்.
charles ariyakumar jaseeharan
No comments:
Post a Comment