பாலியல் துஷ்பிரயோகம், சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் சட்டவிரோதமாக மரம் வெட்டுவதற்கான அனுமதி வழங்கல் உள்ளிட்ட முறைகேடான செயற்பாடுகள் தொடர்பில் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளடங்கலாக 70 உயர் அரச அதிகாரிகள் தொடர்பில் உள்விவகார அமைச்சு, பொதுநிர்வாக அமைச்சுக்கு முறையிட்டுள்ளது.
அமைச்சினால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட ஒழுக்காற்று விசாரணைகளுக்கு அமைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளை குறிப்பிட்ட பதவிகளிலிருந்து நீக்குமாறும் உள்விவகார அமைச்சு பரிந்துரைத்திருப்பதாக அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்த்தன இந்த அதிகாரிகளுக்கு எதிரான விசாரணைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
சில அதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாடுகள் அவர்களுக்குரிய சொந்த கோப்புக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளபோதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்பதுடன், அவர்கள் தொடர்ந்தும் தமது பதவிகளில் பணியாற்றி வருவதும் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 70 அதிகாரிகளில் ஆகக் குறைந்தது 30 பிரதேச செயலாளர்கள் இருப்பதாகவும், இவர்களில் சிலர் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், பிரதேச செயலகங்களில் பணியாற்றும் பெண்களிடம் பாலியல் ரீதியான இலஞ்சம் கோரியமை போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவர்களில் ஒரு பிரதேச செயலாளர் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களைத் தயாரித்து அவற்றை விற்பனை செய்துள்ளார். தவறான முறையில் அனுமதிப்பத்திரங்களைத் தயாரித்து அவற்றை வழங்கியமை குறித்து பலர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தனிப்பட்ட குரோதங்களை அடிப்படையாகக் கொண்டு பழிவாங்கியமை தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன. கொழும்பு, அநுராதபுரம், பதுளை, இரத்தினபுரி மற்றும் பொலனறுவை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து இவ்வாறான முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
உள்விவகார அமைச்சிடமிருந்து முறைப்பாடுகள் தமக்குக் கிடைத்ததும் தாம் அமைச்சு ரீதியான விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்தார். இதன்போது உள்விவகார அமைச்சு மேற்கொண்ட விசாரணைகளும் கவனத்தில் கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment