ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் நாட்டிலுள்ள 61 இலட்சம் குடும்பங்களையும் ஒரேவகையில் கவனிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், வீடமைப்பு நிர்மாணத் துறை மற்றும் கலாசார அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சூரியவெவ பிரதேச செயலகப் பிரிவில் வெதிவௌ கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 260 ஆவது உதாகம மாதிரிக் கிராமமான சிதுபியகம மற்றும் 261 ஆவது மாசஹசக்கம ஆகிய மாதிரிக் கிராமங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய அவர் குடும்பமொன்றுக்கு மாதாந்தம் 55,000 மற்றும் 56,000 ரூபா அளவில் தேவைப்படுகிறது. இத்தொகையை நம்மில் எத்தனை பேர் உழைக்கின்றனர்.
இவ்வாறு உழைக்கப் போய் எத்தனை பேர் கடன்காரர்களாக உள்ளனர். இந்தப் பிரச்சினை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. இந்தப் பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பற்கு தனிநபர்கள் மாத்திரமின்றி குழுக்களும் தவறியுள்ளன.
நான் ஜனாபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், சகலரது வருமானங்களையும் அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வேன். சகல குடும்பங்களதும் வாழ்க்கையை மேம்படுத்தும் சிறந்த திட்டம் தன்னிடமுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இக்கிராமங்களை நிர்மாணிப்பதற்கென பயனாளிகளுக்கு அரசாங்கத்தால் இலவசமாக காணிகள் வழங்கப்பட்டு வீடுகளை நிர்மாணிக்க இலகுகடன் உதவிகளும் வழங்கப்கப்பட்டன.
இந்நிகழ்வில் பயணாளிகளுக்கு காணி உறுதிகள், வீடமைப்புக் கடன்கள், சுய தொழில் உபகரணப் பொதிகள் மற்றும் இலவச மூக்குக் கண்ணாடிகள் என்பனவும் வழங்கப்பட்டன.
ஹம்பாந்தோட்டை நிருபர்
No comments:
Post a Comment