ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபரால் அனுப்பப்பட்ட அறிக்கை சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு கிடைத்துள்ளது.
எனினும், குறித்த அறிக்கை முழுமையானது இல்லை என சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், கிடைத்துள்ள அறிக்கை தொடர்பான மீளாய்வு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பான முழுமையான அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இதேவேளை, உறுதியற்ற தகவல்கள் அடங்கிய அறிக்கைகளை சமர்ப்பிப்பதைத் தவிர்க்குமாறு சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடந்த 23 ஆம் திகதி பணிப்புரை விடுத்திருந்தார்.
இதற்கு முன்னர் கோரப்பட்ட சர்ச்சைக்குரிய 6 சம்பவங்கள் தொடர்பில் கடந்த மாதம் 21ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு பதில் வழங்கும் வகையிலேயே சட்ட மா அதிபர் இந்தப் பணிப்புரையை விடுத்திருந்தார்.
No comments:
Post a Comment