சம்பளப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அரச நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தினர் இன்று (04) சுகயீன விடுமுறையில் ஈடுபட்டுள்ளனர்.
17 தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இன்று சுகயீன விடுமுறையில் ஈடுபட்டுள்ளதாக அரச நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் H.L. உதயசிறி குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக சுகாதாரம், ஆயுர்வேதம், திட்டமிடல் முகாமைத்துவம், நில அளவை, கல்வி நிர்வாகம், உள்நாட்டு வருமானம் உள்ளிட்ட 17 துறைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொழிற்சங்கத்தினரின் கோரிக்கை தொடர்பில், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறியிடம் வினவியபோது, தங்களின் சிக்கல்கள் தொடர்பில் எந்தவொரு தொழிற்சங்கத்தினரும் கலந்துரையாடவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
கலந்துரையாடலுக்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்குத் தயாராக உள்ளதாகவும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேலதிகக் கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பல சந்தர்ப்பங்களின் தங்களின் கோரிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பித்தபோதிலும், இதுவரை அதற்கான தீர்வு கிட்டவில்லை என அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் வினவியபோது, அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் A.P.B. வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment