19 ஆவது திருத்தம் தொடர்பில் சகல ஜனாதிபதி வேட்பாளர்களும் தமது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பத்தி விக்கிரமரத்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் எதிர்ப்பு தெரிவித்த சுதந்திரக் கட்சி தற்பொழுது அதனை ஒழிப்பதற்கு ஆதரவாக பேசுவதாகவும் அவர் கூறினார். நீதித்துறை சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளை அனுமதிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நீதியரசர்கள் நியமிப்பது தொடர்பில் உரிய முறைமையொன்று அவசியம். சட்ட மா அதிபர், பிரதம நீதியரசர், சட்டத்தரணிகள் சங்கம் என்பவற்றின் கருத்து பெற்று இதற்கான பெயர்கள் முன்மொழியப்பட வேண்டும்.
அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் சட்டப்பிரிவில் பணிபுரியும் மேலதிக செயலாளர் ஒருவரை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமிக்க ஜனாதிபதி பரிந்துரை செய்திருந்தார். இதனை அரசியலமைப்பு சபை நிராகரித்தது. இவ்வாறான ஒருவரின் பெயர் அனுப்பப்பட்டது குறித்து சட்டத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை கோரியிருந்தார். இதன்போது சட்ட மா அதிபரின் வாதமும் தனியார் சட்டத்தரணிகளின் வாதமும் ஒன்றாகவே அமைந்திருந்தன. சட்ட மா அதிபர் அரசாங்கத்தை பாதுகாக்கும் வகையில் செயற்படுவார். இங்கு மாற்றமாக செயற்பட்டார். சட்ட மா அதிபர் சுயாதீனமாக செயற்பட வேண்டும். நீதி அமைச்சின் கீழ் அன்றி சுயாதீனமான நிறுவனமாக இந்த நிறுவனம் செயற்பட வேண்டும்.
ஜனாதிபதி விரும்புவது போன்று செயற்படும் சட்ட மா அதிபர் திணைக்களம் தேவையில்லை. பிரதமர் நீக்கப்பட்டமை, பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை, ஜனாதிபதியின் பதவிக்காலம் என்பன தொடர்பான பிரச்சினைகளின் போது சட்ட மா அதிபர் மாற்றமான நிலைப்பாட்டையே முன்வைத்தார்.
நிறைவேற்று அதிகாரத்திற்கு தேவையானவாறன்றி சட்ட மா அதிபர் சுயாதீனமாக செயற்பட வேண்டும். மாகாண சபை தேர்தல் தொடர்பில் பல வழக்குகள் இருக்கையில் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமிக்கப்படுவது தொடர்பிலும் குற்றச்சாட்டுகள் உள்ளன. தகுதியற்றவர்ககள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்படுகின்றனர். சட்டத்தரணிகள் சங்கமும் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளது.
ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்
No comments:
Post a Comment