மலையக இளைஞர்களை ஆயுதம் ஏந்தத் தூண்டும் வகையில் மலையகத்தின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் செயற்படுவதாக இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் நேற்று குற்றம் சுமத்தினார்.
பிறருடைய ஒப்பந்தங்களுக்காக செயற்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கும் அதேநேரம் பதில் பொலிஸ் மா அதிபர், இவ்வாறான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டு மென்றும் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை அவசரகால சட்டம் மலையக இளைஞர் யுவதிகளுக்கு பாரிய நெருக்கடியை கொடுத்திருப்பதால் அதனை நீடிக்கும் வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லையென்றும் அவர் தெரிவித்தார்.
அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாதத்துக்கு நீடிப்பதற்கான விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
பதுளை தெமோதரையிலுள்ள பழமை வாய்ந்த விளையாட்டு மைதானத்தில் விளையாடிய இளைஞர்களை நீதிமன்றத்தில் நிறுத்தியதன் மூலம் அவர்களுக்கு அங்கு விளையாடுவதற்கு விளையாட்டு மைதானத்தில் விளையாடிய இளைஞர்களை நீதிமன்றத்தில் நிறுத்தியதன் மூலம் அவர்களுக்கு அங்கு விளையாடுவதற்கு நீதிமன்றத்தால் தடையுத்தரவு பெற்றுக் கொடுத்த தெமோதரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கிறேன். அதேநேரம் அவருக்கு எதிராக பதில் பொலிஸ் மா அதிபர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது நாட்டின் வடக்கு கிழக்கில் 30 வருடங்களாக யுத்தம் நடைபெற்றது. இறுதியில் முஸ்லீம்களும் ஆயுதம் ஏந்தினர். மலையக மக்கள் மட்டுமே இதுவரை ஆயுதம் எந்தாமல் வீதிக்கு இறங்காமல் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யாமல் அப்பாவிகளாக இருக்கின்றனர்.
மலையக இளைஞர்களை நாம் மிகவும் சிரமப்பட்டு கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றோம். ஆனால் அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மலையக இளைஞர் யுவதிகளுக்கு வழங்கும் நெருக்கடிகளால் அவர்களையும் விரைவில் ஆயுதம் ஏந்த வைத்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெமோதரையில் வெள்ளையர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் விளையாடுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதற்கு தெமொதரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு என்ன உரிமை இருக்கின்றது. அவர் யாரோ ஒருவருடைய ஒப்பந்தத்துக்காக வேலை செய்கிறார் என்பது மட்டும் எமக்குத் தெளிவாகத் தெரிகிறது.
மலையக மக்கள் இந்நாட்டுக்கு செலாவணியை பெற்றுத் தருபவர்கள். அவர்கள் பெரும் சுமையை தமது முதுகெலும்பில் சுமக்கின்றனர். மலையக மக்கள் மீது அக்கறை இருந்தால் அங்குள்ள கஞ்சா, கசிப்பு மற்றும் போதைப் பொருள் பாவனையை தடை செய்யுங்கள் என்றார்.
ஷம்ஸ் பாஹிம், லக்ஷ்மி பரசுராமன்
No comments:
Post a Comment