48 சர்வதேச நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் உல்லாசப் பிரயாணிகளுக்கு விமான நிலையத்தில் இலவசமாக வீஸா வழங்கும் நடைமுறை இன்றுமுதல் ஆரம்பமாகிறது. பிரதமரின் தலைமையில் இதற்கான உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இதேவேளை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் இடம்பெறவுள்ள அனைத்து மத வழிபாடு மற்றும் உற்சவங்களுக்கும் பூரண பாதுகாப்பு வழங்க முடியுமென பாதுகாப்புத் துறையினர் உறுதியளித்துள்ளனர்.
இதற்கிணங்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை பெரஹர உற்சவம் உட்பட அனைத்து பௌத்த உற்சவங்கள் வடக்கில் மற்றும் கொழும்பிலும் இடம்பெறும். ஆடிவேல் உற்சவம் மற்றும் கத்தோலிக்க மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் மடு திருப்பதி, புத்தளம் தலவில ஆலயத் திருவிழா, தேவத்தை பேராலய திருவிழா அனைத்திற்கும் முழுமையான பாதுகாப்பை எம்மால் வழங்க முடியும்.
மேற்படி வீஸா வழங்கும் நடைமுறையை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏப்ரல் 21 ஆம் திகதி பல முக்கிய இடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களால் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்துடன் இலங்கை ஒரு பாதுகாப்பான நாடு என்பது அவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உல்லாசப் பிரயாணத்துறையை மேலும் முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க இலங்கை ஒரு பாதுகாப்பான நாடு என சர்வதேச நாடுகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் சில மாதங்களில் தற்போதுள்ள உல்லாச பயணத்துறையின் நிலை மேலும் முன்னேற்றமடையும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலையடுத்து எமது உல்லாச பிரயாணத்துறை பெருமளவு வீழ்ச்சி கண்டது. பெருமளவு உல்லாச பிரயாணிகள் இலங்கைக்கு வருகை தருவர் என நாம் எதிர்பார்த்திருந்தோம்.
அத்துடன் இந்த வருடத்தில் பெருமளவு இலாபத்தை அத்துறையில் ஈட்டிக்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பும் எமக்கிருந்தது. எனினும் ஏப்ரல் 21 தாக்குதலினால் அந்த இலக்கை அடையமுடியவில்லை.
தற்போது முதற்கட்டமாக நாம் நாட்டின் பாதுகாப்பு நிலைமையை உறுதிப்படுத்தியுள்ளோம். தாக்குதல் இடம்பெற்று இரண்டு மாத காலத்தில் அத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட சகலரையும் கைது செய்துள்ளோம்.
சுமார் 200 பேரை அது தொடர்பில் எம்மால் கைது செய்ய முடிந்துள்ளது. அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் மேலும் இருப்பார்களானாலும் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கிணங்க மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் காத்திரமாக முன்னெடுத்து வருகின்றது என்றார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment