இன்டர்போலினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க, துபாயில் கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொண்ட பிரசார நிகழ்வொன்றில் பங்கேற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை துபாய் ரடிசன் ப்ளு ஹோட்டலில் நடைபெற்ற 'எலிய' அரசியல் பிரசார நிகழ்விலேயே உதயங்க கலந்துகொண்டிருந்தார் என்றும், அதில் 33 இற்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கெடுத்திருந்ததாகவும் தெரியவருகிறது.
இதில் பங்கேற்றிருந்த உதயங்க வீரதுங்க கட்டம்போடப்பட்ட ஷேர்ட் ஒன்றை அணிந்து ஆட்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தமை சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள வீடியோ காட்சியில் காணப்படுகிறது.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக நடத்தப்பட்ட சிவில் அமைப்பே 'எலிய' ஆகும்.
2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கொழும்பு மஜிஸ்திரேட், உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கு இன்டர்போலின் சிவப்பு எச்சரிக்கையைப் பெறுவதற்குப் பணிப்புரை விடுத்திருந்தார்.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான மிக் 27 ரக விமானங்கள் நான்கை 2006ஆம் ஆண்டு கொள்வனவு செய்த போது இடம்பெற்ற நிதி மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில் அவர் தேடப்பட்டு வருகிறார். இந்த வழக்குத் தொடர்பில் தான் கைது செய்வதைத் தடுக்கும் நோக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஆணையைப் பெற்றிருந்தார்.
உள்ளூரிலும் சர்வதேச ரீதியிலும் உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் அவர் சுதந்திரமாக வெளிநாடுகளில் நடமாடுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
முதலில் ரஷ்யாவிலிருந்த இவர் அங்கிருந்து துபாய் நாட்டுக்குச் சென்றிருந்தார். இவருக்கு எதிராக ஐக்கிய அரபு இராச்சிய நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு வழக்கொன்றுள்ளது.
அபுதாபி நீதிமன்றத்தில் இவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோது இலங்கை அரசாங்க அதிகாரிகளோ அல்லது சட்டத்தரணிகளோ நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருக்காமையால் இவ்வழக்கு கைவிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
No comments:
Post a Comment