பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்க தூதகரம் விடுத்துள்ள எச்சரிக்கையானது இலங்கையை மையப்படுத்தி அறிவிக்கப்படவில்லை என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. நீண்ட விடுமுறை அல்லது உற்சவகாலங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக விடுக்கப்படுகின்ற அந்நாட்டினது பொதுவான அறிவித்தலே இது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட தெரிவித்தார்.
இவ்வாறான அறிவிப்பை சமூக ஊடகங்கள் மூலம் வெளியிடுவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கண்டி எசல பெரஹர உற்சவத்தை முன்னிட்டு நேற்று (4) கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் பாதுகாப்பு பிரதானிகள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் மத்தியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர், சம்பந்தப்படட அறிவிப்பு குறித்து பாதுகாப்பு பிரிவினர் கவனமாக அவதானித்து வருகின்றனர். மேலும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இது குறித்து ஆராய்ந்ததாகவும் தெரிவித்தார்.
இந்த வகையில் மக்களின் பாதுகாப்பு கருதி முழுமையான உயர்ந்த பட்ச பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் மேலும் இது போன்ற அறிவிப்புகளை பாதுகாப்பு படையினர் ஒரு போதும் புறக்கணிக்கமாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்வதில் வெளிநாட்டவர்களுக்கு எந்த வொரு அச்ச உணர்வுகளும் இருக்கக்கூடாது. பங்களதேஷ் கிரிக்கட் அணியினர் இலங்கைக்கு விஜயம் செய்ய பயந்தார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
எம்.ஏ.அமீனுல்லா
No comments:
Post a Comment