சஹ்ரானை கைது செய்வது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசனை வழங்கியிருந்தால் அவரை பிடித்திருக்கலாம், குண்டுவெடிப்புக்கள் இடம் பெற்றிருக்காது என தெரிவுக்குழு முன்னிலையில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஹபீஸ் நஸாட் நவவி பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளிக்க அழைக்கப்பட்டபோதே இந்த வாக்குமூலத்தை வழங்கினார்.
2017 ஜுன் மாதத்தில் ஈ.ஈஆர் பிரிவில் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் ஊடாக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு கோப்பு ஒன்று வருமாயின் எனக்கு அந்தக் கோப்பு வழங்கப்படும். பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பணிப்பாளரின் இறுதி அறிக்கை அடங்கிய கடிதங்கள் சில 2017.06.07 இல் எமக்குக் கிடைத்தன. 2017.06.12 ஆம் திகதி எனக்கு அந்த கடிதங்கள் அடங்கிய கோப்பு கிடைத்தது.
இதனை அப்போது எனது கண்காணிப்பின் கீழ் இருந்த குழுவில் மலீக் அஸீஸிடம் வழங்கினேன். சஹ்ரான் என்ற நபர் கூறிய கருத்துக்கள் தமிழ் மொழியில் இருந்தமையால் மலீக் அஸீஸிடம் இந்த கோப்பை பார்க்குமாறு வழங்கியிருந்தேன். அதன் அடிப்படையிலேயே அக்கோப்பை வழங்கினேன்.
பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பணிப்பாளருடைய இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே அது தொடர்பில் கோப்பொன்றை ஆரம்பித்தோம். அதில் சஹ்ரான் இரண்டு கருத்துக்களைக் கூறியுள்ளார். முஸ்லிம்கள் பிறந்த நாளை கொண்டாடுவது தவறானது என்று ஒரு பேச்சிலும், தேசிய கொடியை ஏற்றுவது இஸ்லாத்துக்கு எதிரானது என மற்றுமொரு பேச்சை மேற்கொண்டுள்ளார்.
இதனை அடிப்படையாகக் கொண்டு குறித்த நபரை கைதுசெய்து விசாரிக்க முடியுமா எனக் கேட்டிருந்தனர். ஏதாவது குற்றம் இழைத்திருப்பதாக ஒருவர் மீது நியாயமான சந்தேகம் இருந்தால் அதன் அடிப்படையில் பொலிஸாருக்கு அந்த நபரைக் கைதுசெய்ய முடியும். ஒருவரை கைதுசெய்ய முடியுமா என சட்டமா அதிபரிடம் கேட்பதாயின், பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒருபடி மேற்சென்றே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒருவரை கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்புரை வழங்குவதாயின் அந்த நபர் தொடர்பில் வலுவான சாட்சி அடிப்படையொன்று இருக்க வேண்டும். ஆனால் வலுவான சாட்சியங்கள் அடங்கிய விசாரணைகள் உள்ளடக்கிய ஒரு பக்கம் கூட இருக்கவில்லை.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் ஆலோசனை கோரி கோப்பு ஒன்றை எமக்கு அனுப்பியிருந்தனர். 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர்கள் எம்மைச் சந்தித்தபோது முழுமையான தகவல்களுடன் வந்திருந்தனர். ஏன் அவர்கள் அதனை முதலில் எமக்கு அனுப்பவில்லை. திணைக்களத்தின் பக்கத்தில் எந்தத் தவறும் இல்லை. சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். சட்டமா அதிபர் திணைக்களம் சஹ்ரானை கைது செய்யுமாறு ஆலோசனை வழங்காமையினாலேயே குண்டு வெடித்திருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கின்றோம்.
2017 ஜூன் மாதம் மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் கொழும்பு மஜிஸ்திரேட்டினாலும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு முன்னரே சஹ்ரானுக்கு எதிராக இரண்டு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எனினும், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தரப்பினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இன்று சட்டமா அதிபர் திணைக்களம் சஹ்ரானை கைதுசெய்ய ஆலோசனை வழங்கியிருந்தால் குண்டு வேடித்திருக்காது என்ற கருத்து பரப்பப்பட்டு வருகின்றது. நாம் ஆலோசனை வழங்க முன்னர் இரண்டு திறந்த பிடியாணை இருந்தது. இரண்டு ஆண்டு காலம் ஒரு நபர் மீது இரண்டு திறந்த பிடியாணை இருந்தும் கைது செய்யவில்லை. இரண்டு ஆண்டுகள் இரண்டு பிடியாணை இருந்தும் சட்டம் நீதி அமைச்சு ஒழுங்காக சட்டத்தை கையாளாத நிலையில் சஹ்ரானை கைதுசெய்ய முடியாது போயுள்ளது. தயவு செய்து சட்டமா அதிபர் திணைக்களம் மீது சுமத்தும் குற்றச்சாட்டு மோசமானது. ஆதாரபூர்வமற்றது என்றார்.
(ஆர்.யசி)
vidivelli
No comments:
Post a Comment