அரச காணி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பில் உச்ச நீதிமன்றம் முன்வைத்துள்ள தீர்ப்பை ஆராய்ந்து, நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
அரச காணி விசேட ஏற்பாடுகள் சட்ட மூலம் அரசியலமைப்புக்கு முரணானதென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், அரசாங்கம் அதனை வாபஸ் பெற வேண்டுமெனக் கூறி எதிர்க் கட்சியினர் நேற்று பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்தே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆராய்ந்து அதன்படி நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.
பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை காலை 10.30 மணிக்கு பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கூடியது. இதன்போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பினார்.
அரச காணி விசேட ஏற்பாடுகள் சட்ட மூலம் அரசியல் அமைப்புக்கு முரணானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே அரசாங்கம் அதனை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்த முடியாதென்றும் சுட்டிக்காட்டினார். அத்துடன் அரசாங்கத்தால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி செயற்பட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து எழுந்த எதிர்க்கட்சி எம்.பி. பந்துல குணவர்தனவும் தினேஷ் குணவர்தன எம்.பி.யின் கருத்தை வலியுறுத்தியதுடன் தான்தோன்றித் தனமாக வெளிநாடுகளுக்கு காணிகளை வழங்கவே இச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
இச்சட்டமூலத்தை நிறைவேற்ற மக்களை வீதிக்கு இறக்குவேனென பிரதமர் கூறியிருப்பதானது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவதாக அமைந்துள்ளதென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி எம்.பி. உதய கம்மன்பில, காணி விடயங்கள் மாகாண சபைகளுக்குட்பட்டதென்றும் இவ்வாறான சட்டமூலம் கொண்டுவரப்படுவதற்கு முன்னர் மாகாண சபைகளின் இணக்கத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறினார். அரசியலமைப்புக்கு முரணானதென தீர்ப்பளிக்கப்பட்ட இச்சட்டமூலத்தை ஒழுங்குப்பத்திரத்திலிருந்து அகற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மிலேனியம் செலெஞ் கோப்பரேஷன் என்ற அமெரிக்காவின் திட்டத்தை நிறைவேற்றவே அரசாங்கம் இந்த சட்டமூலத்தைக் கொண்டு வருவதாக, எதிர்க்கட்சி எம்.பி. விமல் வீரவன்ச தெரிவித்தார். திருகோணமலையிலிருந்து கொழும்பு துறைமுகம் வரை காணிகளை சுவீகரிக்க திட்டமிடப்படுகின்றது. இச்சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அரசாங்கம் கட்டுப்பட வேண்டும் என்றார்.
இக்குற்றச் சாட்டுக்களுக்கு சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல பதிலளிக்கையில், நாட்டில் 25 இலட்சம் மக்கள் காணி உறுதிகள் இல்லாதுள்ளனர். இதனால் இவர்கள் வங்கிக் கடன்களைப் பெற முடியவில்லை. காணித் துண்டுகளை தமது பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுக்க முடியவில்லை.
எனவே இந்த 25 இலட்சம் மக்களுக்கு நன்மை செய்யவே இந்த சட்டமூலத்தைக் கொண்டு வந்தோம். ஆனால் மக்களுக்கு நன்மை கிடைப்பதை எதிர்க்கட்சியினர் உச் சநீதிமன்றம் சென்று தடுக்கின்றனர். எதிர்க் கட்சியினரின் சட்ட ரீதியான தர்க்கத்தை நாம் ஆராய்ந்து, நீதிமன்றத் தீர்ப்பின்படி செயற் படுவோம் என்றார்.
ஷம்ஸ் பாஹிம், லக்ஷ்மி பரசுராமன்
No comments:
Post a Comment