அமைச்சர்களின் எண்ணிக்கையை 48ஆக அதிகரிக்கும் தீர்மான வரைவு பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் கூடுதல் ஆசனங்களைப் பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளதால் அரசியலமைப்பின் 46(4) உறுப்புரையின் பிரகாரம் அமைச்சரவை அமைச்சர்களது எண்ணிக்கை 48ஐ அதிகரிக்காத வகையிலும் அமைச்சரவை அல்லாத உறுப்பினர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களது எண்ணிக்கை 45ஐ விட அதிகரிக்காமல் இருக்க வேண்டுமென்றும் பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தேசிய அரசாங்கத்தை அமைத்தன. 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அரசியல் புரட்சியுடன், தேசிய அரசாங்கம் முடிவுக்கு வந்தது.
அதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் கடந்த வருடம் டிசம்பரில் மீண்டும் பதவியேற்றது. இதன்போது 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு அமைய 30 பேர் அமைச்சர்களாகப் பதவிகளை ஏற்றுக்கொண்டனர்.
19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் உருவாக்கப்படும்போது, பாராளுமன்றத்தில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற முதலாவது கட்சியும், இரண்டாவது கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்ப்பு வெளியிட்டது.
இதன் பின்னர், பாராளுமன்றத்தில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற முதலாவது கட்சி, எந்தவொரு கட்சியுடனும் தேசிய அரசாங்கத்தை அமைக்கலாம் என்ற திருத்தத்துடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
அமைச்சுப் பதவிகளை அதிகரிப்பதற்கான பாராளுமன்ற அனுமதியைப் பெறுவதற்கு ஐ.தே.க கடந்த காலத்தில் முயற்சித்தபோதும் அது வெற்றியளிக்கவில்லை. இந்நிலையிலேயே அதனை மீண்டும் பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஷம்ஸ் பாஹிம், லக்ஷ்மி பரசுராமன்
No comments:
Post a Comment