ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நியமித்த பின்பே எமது ஆதரவு யாருக்கு என்பது பற்றி தெரியவரும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று (04) திருகோணமலை நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த அரசாங்கத்தின் போது பல்வேறு ஏற்பாடுகளை நாங்கள் செய்து வந்திருக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை, காணிப் பிரச்சினை மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பிலும் நாங்கள் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து கொண்டே செல்கின்றோம். மக்கள் எம்மைப்பற்றி குறைவாக எப்படிப் பேசினாலும் பரவாயில்லை.
நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். மக்களுக்கு சேவை வழங்கக் கூடியவர்கள் அதனால் என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாங்கள் எப்போதும் நன்றிக்கடன் உள்ளவர்களாகவே இருப்போம் எனவும் அவர் கூறினார்.
அத்துடன் கடந்த காலங்களில் எமக்கு நீங்கள் எவ்வாறு ஆதரித்தீர்களோ அதேபோன்று தொடர்ந்தும் எமக்கு ஆதரவு வழங்குவீர்கள் என நம்புகின்றோம்.
ஒற்றுமையே பலம், ஒற்றுமையாக இருந்து தமிழ் மக்கள் அனைவரும் எதிர்காலத்தில் சிறந்த ஒரு அரசியல் பயணத்தின் நோக்கி செல்ல வேண்டும் ஒரே குடையின் கீழ் இருப்பார்கள் என நம்புவதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, செயலாளர் கே. துரைராஜசிங்கம், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. துரைரட்ணசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் பிரதேச அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அப்துல்சலாம் யாசீம்
No comments:
Post a Comment