ஐக்கிய தேசியக் கட்சியும் அதனுடன் இணைந்து கூட்டணி அமைக்கவுள்ள பங்காளிக் கட்சிகளும் சேர்ந்தே ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன சார்பில் கோட்டாபய ராஜபக்ஷ வேட்பாளராக நிறுத்தப்படுவது ஐ.தே.கவுக்கு எவ்வித சவாலும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கண்டி தலதா மாளிகைக்கு புதிய ஜெனரேட்டர் ஒன்றை நேற்றுமுன்தினம் பெற்றுக்கொடுத்த அமைச்சர் ரவி கருணநாயக்க, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், டி.எஸ். சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகிய தலைவர்களால் கட்டியெழுப்பட்ட ஐ.தே.க வை புதிய திசைக்கு கொண்டுசெல்லும் மட்டத்தில் உள்ள ஒருவரை வேட்பாளராக களமிறக்குவோம். எமது வேட்பாளர் யாரென்பதை நாம் அமைக்கவுள்ள கூட்டணியுடன் இணைந்தே தேர்வு செய்வோம்.
சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக ஐ.தே.க. இதுவரை பெயரிடவில்லை. ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வதற்கு கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பலர் உள்ளனர்.
எந்தவொரு சவாலையும் சந்திக்க நானும் தயாராகவுள்ளேன். அதற்கான தகுதியும் உள்ளது. ஆனால், தான் எந்த மட்டத்தில் உள்ளோம் என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.
பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ களமிறக்கப்படுவாரென தெரிவிக்கப்படுகிறது. கோட்டாபய ராஜபக்ஷ வேட்பாளராக வருவதால் எமக்கு எவ்வித பாதிப்பும் சவாலும் இல்லை. அதன்மூலம் ஐ.தே.கவுக்கு விசேடமான வெற்றியே கிடைக்கும் என்றும் கூறினார்.
No comments:
Post a Comment