ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் 'ஜனநாயக தேசிய முன்னணி’ என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணி அமைப்பதற்கான உடன்படிக்கை இன்று (05) கைச்சாத்திடப்பட மாட்டாதென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.
புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் பல மாற்று யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதால் அனைத்துத் தரப்பினரதும் இணக்கத்தை எட்டும் வரை கூட்டணி உடன்படிக்கையை கைச்சாத்திடும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பங்காளிக் கட்சித் தலைவர்கள் மற்றும் ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் பிரதமர் நேற்று முன்தினம் இரவு நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேற்று விசேட அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த ஐ.தே.க. பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம்,
நாட்டை பாதுகாக்கும் நாட்டை அபிவிருத்தி செய்யும் பாரிய கூட்டணியை அமைப்பதற்காக இதுவரை நடைபெற்றுவந்த கலந்துரையாடல்களுடன் மேலும் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த யோசனைகள் தொடர்பில் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளோம்.
ஆகவே, பேச்சுவார்த்தைகள் முடியும்வரை உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எமது கூட்டணியில் காணப்படும் ஜனநாயகத் தன்மையில் பிரகாரமே இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment