எஸ்.எம்.எம்.முர்ஷித்
இந்திய வீட்டுத் திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தில் நான்காயிரம் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.ஈ.தரங்ஜித் சிங் சன்து தெரிவித்தார்.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கும்புறுமூலையில் இந்திய நிதி உதவி மூலம் அமைக்கப்பட்ட காந்தி மாதிரிக் கிராமம் மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அல்மஜ்மா நகரில் அமைக்கப்பட்ட முகைதீன் அப்துல் காதர் மாதிரிக் கிராமம் என்பன மக்களிடம் நேற்று சனிக்கிழமை கையளிக்கப்பட்டது.
கல்குடாப் பிரதேசத்தில் மக்களிடம் கையளிக்கப்பட்ட வீட்டுத் திட்டத்திற்கான பிரதான நிகழ்வு ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.ஈ.தரங்ஜித் சிங் சன்து கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் இந்திய நிதி உதவி மூலம் இலங்கையில் நூறு மாதிரிக் கிராமங்கள் அமைக்கப்படுகின்றது. அதில் முதலாவது கிராமம் ஹம்பகாவில் கையளிக்கப்பட்டது.
கடந்த நான்கு வருடத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மூன்று முறை மேற்கொண்ட விஜயத்தின் மூலம் இந்திய இலங்கை நட்புறவு ஒரு புத்துணர்வை பெற்றுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின் இலங்கைக்கு வருகை தந்த முதல் உலகத் தலைவராவார். இலங்கை குடி மக்களோடு தோளோடு தோல் நிற்கும் இந்திய பிரதிநிதிகளின் நட்புறவைவும், நம்பிக்கையையும் செய்தியாக தாங்கி வந்தார்.
இரண்டாவது தடவை இந்திய பிரதமராக பதியேற்று முதல் வெளிநாட்டு பயணத்தில் இலங்கை விஜயம் ஒரு பகுதியானது. இவையெல்லாம் நம்மிடமுள்ள விசேடமாக உறவை பறைசாற்றுகின்றது.
ஒரு உற்ற நண்பனாகவும், அன்மைய நாடாகவும் இந்தியா இலங்கையின் தேவைகளை பூர்த்தி செய்ய எப்போதும் துரிதமாக செயற்பட்டு வருகின்றது. இந்த ஆதரவு எல்லா துறைகளிலும் இலங்கையின் தேவைக்கேற்ப எப்போதும் தொடரும்.
தற்போது இலங்கைக்கு அபிவிருத்திக்காக கிட்டத்தட்ட மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா ஒதுக்கி உள்ளது. கிழக்கு மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி சார்ந்த திட்டங்களை முழு மானிய நிதியின் ஊடாக செயற்படுத்தியதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வாழ்வாதாரம், சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருகோணமலை பல்கலைக் கழகத்தில் சித்த மருத்துவ பீடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய வீட்டுத் திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தில் நான்காயிரம் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. பாடசாலைகள் தரமுயர்த்தப்பட்டுள்ளன. தொழில் பயிற்சி, கணனி ஆய்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்திய நிதி உதவி மூலம் கிழக்கு பல்கலைக் கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தில் புதிய கேட்போர் கூடம் அமைக்கப்படவுள்ளது.
தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சை மருத்துவ பீட கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சுகாதார மேம்பாட்டு திட்டமாக மலசல கூடங்கள் அமைக்கபடவுள்ளது. உங்களின் தேவைக்கேற்ப பல்வேறு வேலைத் திட்டங்களை செய்வதற்கு இந்தியா தயாராக உள்ளது.
வடக்கு கிழக்கில் வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்தினை நீங்கள் அறிவீர்கள். இந்த திட்டத்தினை இலங்கையின் பிற இடங்களும் நிறைவேற்றுகின்றோம். மலையகத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வீடுகள் அமைக்கப்படுகின்றது என்றார்.
இந்நிகழ்வில் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரமேதாச, இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட சிரேஷ்ட முகாமையாளர் க.ஜெகநாதன், தேசிய வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள், மதகுருமார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment