எஸ்.எம்.எம்.முர்ஷித்
ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டு முன்னனியில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுபவரை கொண்டு வந்தால் மாத்திரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைச்சாத்திடும் என பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கும்புறுமூலையில் இந்திய நிதி உதவி மூலம் அமைக்கப்பட்ட காந்தி மாதிரிக் கிராமம் மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அல்மஜ்மா நகரில் அமைக்கப்பட்ட முகைதீன் அப்துல் காதர் மாதிரிக் கிராமம் என்பன மக்களிடம் நேற்று சனிக்கிழமை கையளிக்கப்பட்டது.
கல்குடாப் பிரதேசத்தில் மக்களிடம் கையளிக்கப்பட்ட வீட்டுத் திட்டத்திற்கான பிரதான நிகழ்வு ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றபோது பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது அனைவர் வாயிலும் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார், அதிலும் வெற்றி பெறக் கூடிய வேட்பாளர் யார் என்ற அடிப்படையில் இன்று ஜனரஞ்சகமாக எதிர்கட்சிகள் எல்லாம் பயப்படக்கூடிய அளவிற்கு சஜித்தான் வேட்பாளராக வந்து விடுவாரோ என்று எங்களிடம் குடைந்து குடைந்து கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இலங்கையில் இரண்டு வாரங்கள் அல்லது ஓரிரு மாதங்களில் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தப் போகின்றது என்ற நிலையில் இருக்கின்ற மிகவும் முக்கியமானவர் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் சஜித் பிரேமதாச. முன்னாள் ஜனாதிபதியில் மகன் என்ற அந்தஸ்தை வைத்துக்கொண்டு இவ்வாறான விடயங்களுக்கு அவர் முன்வரவில்லை.
அதிலும் விட ஒரு சாதனை வீரர், தைரியசாலி, எல்லா இன மக்களையும் நேசிக்கின்ற ஒரு துடிப்புள்ள இளைஞன். அவருக்கு கொடுக்கின்ற எந்த செயலையும் மிகவும் சாணக்கியமாக முடிக்கக் கூடிய தலைமைத்துவ அம்சங்களை கொண்ட இளைஞன். இதனால் இன்று வெற்றி கதாநாயகனாக பார்க்கப்படுகின்றார்.
ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டு முன்னனியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைச்சாத்திடுகின்றது என்றால் வெற்றி பெறக்கூடியவராக இருக்கின்ற இவ்வாறானவர்கள் வருகின்ற நேரத்தில் தான் வெற்றி பெறுபவர்களை நிறுத்துங்கள். அவ்வாறானால் தான் நாங்கள் கைச்சாத்திடுவோம் என்று கூறிக்கொண்டிருக்கின்றோம். அவர்களும் அதில் கரிசனை காட்ட வேண்டும்.
ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டு முன்னனியில் எல்லா இன மக்களும் எதிர்பார்க்கின்ற ஒருவர் வெற்றியாளராக வந்தால் தான் எங்களது அபிலாசைகளை வெற்றியடைக்கூடிய ஏற்பாட்டில் ஆதரிக்கலாம். எமது பகுதிகளில் பல பிரச்சனைகள் இருக்கின்றது.
கோறளைப்பற்று மத்தியில் மக்களது காணிப் பிரச்சனைகள், விவசாய பிரச்சனைகள் இருக்கின்றது. இவற்றை சுமூகமான முறையில் தீர்க்க வேண்டும் என்று சொன்னால் எங்களோடு தோலோடு தோல் சேர்ந்து எல்லா இன மக்களுடன் சுமூகமான முறையில் தீர்த்து தரக்கூடிய தலைமைத்துவம் தான் தேவை என்றார்.
இந்நிகழ்வில் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரமேதாச, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.ஈ.தரங்ஜித் சிங் சன்து, இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட சிரேஷ்ட முகாமையாளர் க.ஜெகநாதன், தேசிய வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள், மதகுருமார்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment