
கடந்த திங்கட்கிழமையன்று வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான அரச நியமனம் வழங்குமாறு கோரி சுழற்சி முறையிலான சத்தியக்கிரகப் போராட்டத்தினை ஆரம்பித்தனர்.
மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங்காவுக்கு முன்னால் இவர்களின் இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் இடம்பெற்று வந்தது.
உள்வாரி, வெளிவாரி பட்டதாரிகள் என்ற வித்தியாசமில்லாமல் அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பு வழங்கப்படல் வேண்டும்.
40 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து இவர்கள் இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ச்சியாக மூன்று தினங்கள் நடைபெறும் போராட்ட இடத்துக்கு நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஸ்தலத்திற்கு சென்று அவர்களுடன் கலந்துரையாடியதுடன் தற்போதுள்ள நிலைமைகள் தொடர்பாகவும் தாம் எடுத்துக் கொண்ட முயற்சிகள் தொடர்பாகவும் விளக்கி கூறினார்.
16,800 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டுக்கும் 2016 ஆம் ஆண்டுக்குமிடைப்பட்ட பட்டதாரிகளுக்கு தேசிய ரீதியில் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போது 15,948 பட்டதாரிகள் உள்வாரிப் பட்டதாரிகளாக இருக்கின்றனர்.
மிகுதியாக உள்ள 842 வெளிவாரிப் பட்டதாரிகளுக்கும் இப்போது தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 34 வெளிவாரிப் பட்டதாரிகள் இதில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனங்கள் வழங்கி விட்டு எதிர்வரும் 14 ஆம் திகதிக்கிடையில் கடமையைப் பொறுப்பேற்காத விடத்து அதில் வரும் வெற்றிடங்களுக்கு வெளிவாரிப்பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
உள்வாரி வெளிவாரி என்ற வித்தியாசமில்லாமல் அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்படல் வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்
எனினும் உங்களது போராட்டம் நியாயமானது நான் உங்களை எழும்பிச் செல்லுமாறு கோரவில்லை விடயங்களை விளக்கியுள்ளேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மேலும் தெரிவித்தார்.
புதிய காத்தான்குடி நிருபர்
No comments:
Post a Comment