தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட 50 ரூபா கொடுப்பனவை, விரைவில் பெற்றுக் கொடுக்க கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று (31) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
50 ரூபா கொடுப்பனவு இதுவரையில் வழங்கப்படாதமை தொடர்பில், நேற்று முன்தினம் கூடிய அமைச்சரவையில் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து பிரதமர் இப்பிரச்சினையில் தலையிட்டு, 50 ரூபாவை உடன் பெற்றுக் கொடுக்கத் தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பது தொடர்பிலான விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, அரசாங்கத்தால் இன்னமும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொடுக்க முடியாதுள்ள தாகக் குற்றம் சுமத்தினார்.
அத்துடன் அரசாங்கம் விளம்பரங்கள், விழாக்களுக்குச் செலவழிக்கும் அநாவசியமான பணத்தில் தொட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா கொடுப்பனவை வழங்க வேண்டுமென்றும் கூறினார்.
ஜனவரியில் 50 ரூபா வழங்குவதாக அளித்த வாக்குறுதியை ஓகஸ்ட் மாதமாகியும் பெற்றுக் கொடுக்க முடியாத நிலையில் அரசாங்கம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதற்கு பதிலளிக்கும் முகமாகவே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு பதிலளித்தார்.
ஷம்ஸ் பாஹிம், லக்ஷ்மி பரசுராமன்
No comments:
Post a Comment