இந்திய வம்சாவளி மலையக தோட்டப்புற மக்கள் இரண்டாம் தர குடிகள் அல்ல. அவர்களுக்கு காணி உரிமை கிடைத்த நாளே அவர்கள் உண்மையான இலங்கை பிரஜையான நாளாகுமென காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்படும் இந்திய வீட்டுத்திட்டத்துக்கான ஆரம்ப நிகழ்வு அண்மையில் காலி தலகஸ்வல தோட்டத்தில் நடைபெற்றபோது இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும், தெரிவித்த அவர், இந்திய வம்சாவளியினரான தமிழ் மக்கள் குடியுரிமை இல்லாதிருந்த நிலையில் அவர்களுக்கு மீண்டும் குடியுரிமை கிடைக்க செய்ய ஐக்கிய தேசிய கட்சியே நடவடிக்கை எடுத்தது. அவர்களுக்கு குடியுரிமை கிடைத்த போதும் அவர்களுக்கென்று சொந்தமாக காணித் துண்டு ஒன்று இருக்கவில்லை.
ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தில் அவர்களுக்கு தனி வீடு அமைத்துக் கொடுக்கப்படுவதுடன் அதற்காக ஏழு பேர்ச்சஸ் காணியும் முழுமையான காணி உறுதியும் வழங்கி வருகிறோம். அவர்களுக்கு குத்தகை பத்திர அடிப்படையில் உரிமைப் பத்திரங்கள் வழங்குவதற்கு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை நாம் திரும்ப பெறச் செய்துள்ளோம்.
இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பான பெருந்தோட்டத்துறையில் தொழிலாளர்களாக பணியாற்றும் மக்களது வாழ்வாதாரம் சிறப்பானதாக இருக்கவில்லை. காலத்திற்கு காலம் அவர்களுக்கு கல்வி முதலான வாய்ப்புகள் தேசிய ரீதியாக வழங்கப்பட்ட போதும் இன்னும் ஆற்றவேண்டிய பணிகள் பல உள்ளன.
அவர்களை இலவச கல்வி முறைமைக்குள் உள்வாங்கியதன் காரணமாகவே இன்று திகாம்பரம், திலகராஜ் போன்றவர்கள் தோட்டத்தில் பிறந்து வளர்ந்து, தோட்டப் பாடசாலைகளில் கல்வி கற்று இன்று அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் திறமையாக செயல்படுகின்றனர்.
அண்மையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் காணி உரித்து வழங்க அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போது அமைச்சர் திகாம்பரம் அதனை வன்மையாக மறுத்தார். நானும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தேன்.
ஏற்கனவே எங்களது இரண்டு அமைச்சுகளும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுடன் இணைந்து முழுமையான காணி உறுதிப்பத்திரம் வழங்கும் அனுமதியைப் பெற்று நடைமுறைப்படுத்தி வருகிறோம். இந்த நிலையில் அதற்கு மாறான முறைகள் அவசியமில்லை. அவர்கள் இந்த நாட்டின் இரண்டாம் தர பிரஜைகள் இல்லை என்றார்.
இதில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தாணிகரகத்தின் கவுன்சிலரும் வீடமைப்புத்திட்ட பொறுப்பதிகாரியுமான மஞ்சுநாத் பிரதம அதிதியாகவும், காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியசேன கமகே, நுவரலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் ஆகியோர் சிறப்பு அதிதியாகவும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment