சடலங்களைப் பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் ‘போர்மலினை’ உணவுப் பாதுகாப்புக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, August 2, 2019

சடலங்களைப் பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் ‘போர்மலினை’ உணவுப் பாதுகாப்புக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

சடலங்களைப் பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் ‘போர்மலினை’ உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்துவது தொடர்பில் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கைத்தொழில், வர்த்தகம், மீள் குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறனபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் புத்திக பதிரன தெரிவித்துள்ளார். 

கடந்த அரசாங்க காலத்தில் அப்போதைய வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் போர்மலின் இறக்குமதி செய்வதற்கான அனுமதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. 

அதற்கு முன்னர் அவ்வாறான முறைமை இருக்கவில்லை. போர்மலின் (எம்பாம்) சடலத்தை பாதுகாப்பதற்காகவும் நறுமணமூட்டி வைத்திருப்பதற்காகவும் மாத்திரமே பயன்படுத்தப்படும். 

எனினும் உணவுப் பொருட்களை நீண்ட காலம் வைத்திருப்பதற்காக இது தற்பொழுது பயன்படுத்தப்படுவது கவலைக்குரிய விடயமாகும் என்றும் அவர் தெரிவித்தார். 

இதற்கிணங்க நாட்டிலுள்ள அனைத்து மலர்ச்சாலைகளையும் பதிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மலர்ச்சாலைகளின் எண்ணிக்கைக்கு அமைவாக போர்மலினை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. 

இந்த நடைமுறை விதிகளுக்கு அப்பால் சடலங்களை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் இந்த போர்மலின் விநியோகிக்கப்படுமாயின் விநியோகிப்பவர்களுக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபை கடும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். 

அலரி மாளிகையில் (01) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment