பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய 50 ரூபாய் கொடுப்பனவு விடயத்தில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க முட்டுக்கட்டையாக இருப்பதை எம்மால் ஏற்றுகொள்ள முடியாது என மலையக மக்கள் முண்ணனியின் தலைவரும் பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் 67 வது பிறந்த தின நிகழ்வை முன்னிட்டு இன்று (01) ஹட்டன் நகரில் ஏற்பாடு செய்யபட்டிருந்த நிகழ்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், "இந்த பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபா கொடுப்பனவிற்காக தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் நான் அமைச்சர் மனோ கனேசன், அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் திலகராஜ், வேலுகுமார் அரவிந்தகுமார் ஆகியோரும் போராடி கொண்டு இருக்கின்றோம்.
எனவே, இந்த 50 ரூபாவினை வழங்க இந்த அரசாங்கம் ஏற்று கொண்டாலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்று கொண்டாலும் அமைச்சர் நவீன் திசாநாயக்க ஏற்று கொள்ளாமல் இருப்பது மன வருத்ததை தந்துள்ளது. அதுவும் நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரு அமைச்சர் என்ற வகையில்.
வருகின்ற ஜனாதிபதித் தேர்தலிலே எமது தமிழ் முற்போக்கு கூட்டணி யாரை அதரித்தாலும் கூட, மலையக மக்களுடைய வாக்கு பலம் தனியாக இருக்கின்றது என்பது அனைவரும் அறிந்த விடயம். ஆகவே, எங்களுடைய வாக்குகள் ஜனாதிபதித் தேர்தலில் மிக அவசியம்.
இதேவேளை, எங்களை பொருத்தவரையில் மலையக மக்களுக்கு உதவ கூடிய ஒருவரே ஜனாதிபதியாக வர வேண்டும் என்பதே எமது கருத்து. அது மட்டும் அல்ல அவர் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒருவராகவும் இருக்க வேண்டும்" என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
யாரோ வருகிறார் யாரோ போகின்றார் என்பதற்காக நாங்கள் வாக்களிக்க முடியாது எங்களுடைய பிரச்சினையை தீர்க்க கூடிய ஒரு தலைவராக இருக்க வேண்டும் சர்வதேச ரீதியிலே அவர் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தலைவராக இருக்க வேண்டும் அதுமட்டும் அல்ல இந்த நாட்டினுடைய சர்வதேச பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க கூடியவராக இருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
மலையக நிருபர் சதீஸ்குமார்
No comments:
Post a Comment