க.பொ.த உயர்தரப் பரீட்சை நாடு முழுவதும் இன்று (5ஆம் திகதி) ஆரம்பமாகின்றது. இம்முறை 3,37,704 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன் 2678 பரீட்சை நிலையங்களும் 315 இணைப்பு நிலையங்களும் இதற்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இம்முறை நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள் மத்தியில் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களும் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது செல்லுபடியான கடவுச்சீட்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிப்பதன் மூலம் பரீட்சார்த்திகள் தனது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்தெரிவிக்கையில் பரீட்சையில் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்நோக்கும் பாடசாலைப் பரீட்சார்த்திகள் அதிபர் மற்றும் வலயக் கல்விப் பிரதிப் பணிப்பாளரினால் ஆள் அடையாளம் உறுதி செய்யப்பட்ட 2 புகைப்படத்துடன் வருகை தந்து பரீட்சைக்கு தோற்ற முடியும்.
அதேபோன்று ஆள் அடையாளத்தை உறுதி செய்ய முடியாத தனிப்பட்ட பரீட்சார்த்திகள் கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளரினால் உறுதி செய்யப்பட்ட 2 புகைப்படங்களுடன் பரீட்சைக்குத் தோற்ற முடியும்.
கடந்த வருடம் பரீட்சை தொடர்பில் மாணவர்கள் கொண்டிருந்த அழுத்தத்தை குறைப்பதற்கு 3 மணித்தியாலங்களை கொண்ட வினாப்பத்திரங்களுக்கு விடையளிப்பதற்காக மேலதிகமாக 10 நிமிடங்கள் வழங்கப்பட்டடிருந்தது. இந்த ஏற்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.
நாட்டில் அண்மையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குலையடுத்து ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புக்கு மத்தியில் பரீட்சைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனைக் கவனத்தில் கொண்டு பரீட்சார்த்திகள் 30 நிமிடத்துக்கு முன்னர் பரீட்சை நிலையத்துக்கு சமுகமளிப்பது சிறந்தது. பரீட்சை ஆரம்பிக்கும் தருணத்தில் வருகை தருவதன் மூலம் பதற்ற நிலைக்கு உள்ளாவதைத் தவிர்க்கும் வகையில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment