விவசாய சமூகத்தினரை கைவிடாது நஷ்டஈடு வழங்கி கைகொடுத்து உதவியது எமது அரசாங்கமே - ஜனாதிபதி தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, August 4, 2019

விவசாய சமூகத்தினரை கைவிடாது நஷ்டஈடு வழங்கி கைகொடுத்து உதவியது எமது அரசாங்கமே - ஜனாதிபதி தெரிவிப்பு

விவசாய சமூகத்தினர் எதிர்கொள்ள நேர்ந்த இயற்கை அனர்த்தங்களில், அவர்களை கைவிடாது நஷ்டஈடு வழங்கி கைகொடுத்து உதவியது எமது அரசாங்கமே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

விவசாய சமூகத்தை வலுவூட்டுவதற்காக தற்போதைய அரசாங்கத்தில் விரிவான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2018ஆம் ஆண்டு சிறுபோகத்தின்போது பயிர்ச் செய்கையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் (03) பிற்பகல் பொலன்னறுவை புத்தி மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

சகல அரசாங்கங்களும் தேர்தல் வாக்குறுதிகளுடன் மட்டும் மட்டுப்படுத்திக் கொண்டிருந்த மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டத்தை நிறைவு செய்வதற்கு, தான் உரிய தலைமைத்துவத்தை வழங்கியதும் விவசாய சமூகத்தினரின் நலனுக்காகவே என்றும் அவர் குறிப்பிட்டார். 
விவசாய சமூகத்தின் முக்கிய பிரச்சினையான நீர் மற்றும் காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

பொலன்னறுவை மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டு சிறுபோகத்தின்போது விவசாய நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட 1200பேருக்கு விவசாய காப்புறுதி நஷ்டஈட்டுத் தொகையை வழங்கிவைக்கும் நிகழ்வை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார். 

அமைச்சர் பி.ஹெரிசன், வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க. நகர பிதா சானக்க சிதத் ரணசிங்க ஆகியோர் உள்ளிட்ட மாகாண மக்கள் பிரதிநிதிகளும் அரசாங்க அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment