அவசரகாலச் சட்டம் இருந்தாலேயே முப்படையை பயன்படுத்த முடியும் - பாதுகாப்பு தரப்பின் ஆலோசனைக்கமையவே நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, August 1, 2019

அவசரகாலச் சட்டம் இருந்தாலேயே முப்படையை பயன்படுத்த முடியும் - பாதுகாப்பு தரப்பின் ஆலோசனைக்கமையவே நீடிப்பு

பாதுகாப்புத் தரப்பினரின் ஆலோசனைக்கமையவே அவசரகாலச் சட்டத்தை நீடிக்கின்றோமே தவிர இது அரசாங்கத்தின் தேவையில்லை. ஓகஸ்ட் மாதத்தில் பல விழாக்கள், தேவாலயங்களில் பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்தார். 

அவசரகாலச் சட்டத்தை ஒருமாத காலத்துக்கு நீடிப்பது தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று (31) நடைபெற்றது. இங்கு உரையாற்றியயோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது பாதுகாப்புத் தரப்பினரின் ஆலோசனைக்கமையவே அவசரகாலச் சட்டத்தை நீடிக்கின்றோமே தவிர இது அரசாங்கத்தின் தேவையில்லை. ஓகஸ்ட் மாதத்தில் பல விழாக்கள், தேவாலயங்களில் பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. கண்டி பெரஹெராவை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் கண்டிக்கு வரவுள்ளார்கள். 

கண்டி பெரஹெராவை முன்னிட்டு இரண்டு மாதங்களுக்கு முன்பே உளவுப் பிரிவினரை கண்டிக்கு நாம் அனுப்பி வைத்துள்ளோம். அவர்கள் தொடர்ந்தும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று தெவுந்தர தேவாலயத்திலும் ஊர்வலம் நடத்தப்படவுள்ளது. மடு தேவாலயத்தின் திருவிழாவும் நடைபெறவுள்ளது. 

எனவே நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. பொலிஸாரால் மட்டும் அனைத்து பாதுகாப்பையும் உறுதிப்பபடுத்துவது சிரமமான விடயம். இதற்கு முப்படையினரதும் ஒத்துழைப்பு தேவை. அவசரகாலச் சட்டம் நீக்கப்படுமாக இருந்தால் முப்படையினரையும் மீண்டும் அவர்களது முகாம்களுக்குள் முடக்கி வைக்க நேரிடும். 

சஹ்ரான் என்பவரும் அவரது குழுவினரும் இணைந்தே இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து குற்றப் புலனாய்வுப் பிரிவு, பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் உளவுத் துறையினர் இணைந்து அதனுடன் சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர். 

இதன் காரணமாக பாதுகாப்பு நிலைமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதுடன் நிலைமை யாவும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அவர்கள் மிகச் சிறப்பாக முன்னெடுத்து வரும் இந்நடவடிக்கைகளுக்காக நான் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். 

சஹ்ரானின் வகுப்புகளுக்குச் சென்றவர்களையும் நாம் தற்போது கைது செய்து வருகின்றோம். அதனடிப்படையிலேயே சஹ்ரானின் மனைவியின் சகோதரரையும் நாம் கைது செய்துள்ளோம். புலனாய்வுப் பிரிவினர் அவர்களுடைய செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். அதற்கு மேலும் ஒரு மாத கால அவசரகாலச் சட்டம் தேவையென பாதுகாப்புத் தரப்பு கோரிக்கை முன்வைத்துள்ளது. 

குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியான ரவி சேனாரத்ன என்பவர் இதுவரை முன்னெடுத்துள்ள விசாரணை அடிப்படையில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் தலைவர் சஹ்ரானுக்கு நேரடியாக தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்துமாறு எவ்வித கட்டளையை வழங்கவும் இல்லை. 

அதற்கான வெடிபொருள் மற்றும் ஆயுதங்களை வழங்கவும் இல்லை. சஹ்ரான் தானாகவே இந்த அமைப்பின் மீது ஆர்வம் கொண்டு செயற்பட்டுள்ளார். அவர் ஐ.எஸ் அமைப்பின் கருத்தியலை பின்பற்றியதன் விளைவாலேயே ஏப்ரல் 21 ஆம் திகதி கொடூரமான சம்பவம் இடம்பெற்றது. 

சினமன் கிரேண்ட் ஹோட்டலில் குண்டை வெடிக்கச் செய்த இன்ஷாப் என்பவர் அவரது மனைவிக்கு தொலைபேசியில் அனுப்பி வைத்த ஒளிநாடாவில் உலக நாடுகளில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார். மியன்மாரில் ரோஹிங்கிய மக்கள், சிரியாவிலுள்ள முஸ்லிம்கள் மற்றும் கிறைஸ்ட்செர்ச்சில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தும் அவர் கூறியுள்ளார். 

விமல் வீரவன்ச எம்.பி அமெரிக்காவின் எப்.பி.ஐ அதிகாரிகள் வெலிசறை கடற்படை முகாமுக்கு சென்ற செய்தியை பெரிதுபடுத்தி கூறினார். எமது நாட்டில் இடம்பெற்றது சர்வதேச பயங்கரவாத தாக்குதல். இதனால் நாம் சர்வதேச புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம். 

அந்த வகையிலேயே அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தரவுகளை பெற்றுக் கொள்வதற்காக தடுத்து வைத்துள்ள சந்தேக நபர்களை சந்தித்தனர். அவர்கள் கடற்படை தளபதியுடனும் பேச்சு நடத்தியிருந்தனர். 

எதிர்கட்சியினர் எமக்கு பூச்சாண்டிகாட்ட முனைகின்றனர். நாட்டில் இடம்பெற்ற துரதிஷ்டவசமான சம்பவத்தை அரசாங்கம் என்ற வகையில் நாம் பொறுப்பேற்கின்றோம். அதனை நாம் தட்டிக்கழிக்கவில்லை. அதேபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்கும் எமது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றோம். 

கடந்த ஒக்டோபரில் ஆட்சி மாறியபோது அமைச்சர் றிசாட்டை பணம் கொடுத்து கட்சி மாறுமாறு கேட்டபோதும் அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டார்.அதற்கு பழிவாங்கும் வகையிலேயே அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றார். 

லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment