ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடக்கும் என்ற நிலை உறுதியாகியுள்ள நிலையில் பிரதான கட்சிகள் தமது வேட்பாளர் தொடர்பில் ஸ்திரமான தீர்மானமொன்றை வெளியிடாமை தற்போது அரசியலில் குழப்ப நிலையை உருவாக்கியுள்ளது.
ஐ.தே.க. தமது தீர்மானத்தை இன்று சுகததாச அரங்கு மாநாட்டில் அறிவிக்கும் என பெரும் எதிர்பார்ப்புகள் நிலவிய நிலையில் அந்த மாநாடே ஒத்திப் போடப்பட்டமை எதிர்பார்ப்புகளை வலுவிழக்கச் செய்துள்ளது.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவான சிறுபான்மைக் கட்சிகளும் கூட தமது நிலைப்பாட்டை உறுதியாகத் தெரிவிக்க முடியாத சூழ்நிலையே உருவாகியுள்ளது.
இதற்கிடையில் எதிர்வரும் செப்டெம்பர் 15ம் திகதிக்கிடையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை விடுக்கப்போவதாகவும், தேர்தல்கள் நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு வழங்கியிருந்த கால அவகாசம் நிறைவடைந்துவிட்டதாகவும் இனி நாம் அதிகாரத்தை கையிலெடுக்க நேரும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க் கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்போவதாக தகவல்கள் வெளிவருகின்ற போதிலும் அது தொடர்பிலும் எதனையும் உறுதியாகக் கூறமுடியாத நிலையே உள்ளது.
இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் நேற்றுக் கருத்து தெரிவித்த பாராளுமன்ற சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழு உறுப்பினர்கள் குழு கூடி முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன கட்சிகளுக்கிடையில் இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ள போதும் அதிலும் இறுதித் தீர்மானம் எடுப்பது இழுபறி நிலையிலேயே காணப்படுகிறது.
இரு கட்சிகளும் ஒன்றிணைந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என எதிர்பார்க்கப்பட்டபோதும் இந்த இழுபறி நிலையினால் அவ்வாறு நடக்காது என்றே தெரிகிறது. இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்து வரும் கருத்துக்கள் பொதுஜன பெரமுன கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதற்கு முரணாகவே காணப்படுகிறது.
இரு கட்சிகளும் இணைந்த பின்னரே இரு கட்சிகளும் சேர்ந்து தீர்மானித்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியுமே தவிர இருவர் மூவர் கூடி எடுக்கும் தீர்மானங்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு போதும்இணங்காது என்ற கூற்றையும் அவர் பகிரங்கமாக அறிவித்து வருகின்றார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இம்முறை தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை பகிரங்கமாக வெளியிடாத நிலையிலும் அது ஐ.தே.கட்சிக்கு சார்பாகவே செயற்பட வாய்ப்புண்டு என அரசியல் அவதானிகள் தெரிவித்து வருகின்றனர்.
அதேபோன்று தான் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் ரிசாத் பதியுதீனின் தலைமையிலான கட்சியான அகில இலங்கை மக்கள் கங்கிரஸ், மனோ கணேசன் தலைமையிலான தமிழர் முற்போக்கு முன்னணி என்பனவும் ஐ.தே.கவையே ஆதரிக்கும் என எடுத்துக்கொண்டாலும், ஐக்கிய தேசியக் கட்சி தமது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் உறுதியான தீர்மானத்தை வெளியிடாத நிலையில் அக்கட்சிகளும் தமது நிலைப்பாட்டை உறுதியாகத் தெரிவிக்க முடியாத நிலையிலேயே உள்ளன.
சிறு சிறு அரசியல் கட்சிகள் அமைப்புகளின் நிலையும் இதுதான்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment