கடந்த ஒரு மாதத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய 7,318 சாரதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் கடந்த ஜூலை 05 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதற்கமைய, கடந்த ஜூலை 05 ஆம் திகதியிலிருந்து இன்று (05) காலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் போதையில் வாகனம் செலுத்திய 7,318 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், நேற்று (04) காலை 6.00 மணியிலிருந்து இன்று (05) காலை 6.00 மணி வரையான 24 மணித்தியாலத்திற்குள் மது போதையில் வாகனம் செலுத்திய 174 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய. 2019/10 எனும் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் 216 ஆவது பிரிவின் கீழ், சாதாரண சாரதி ஒருவர் போதையில் வாகனம் செலுத்தினால், ரூபா 25,000 - 30,000 அபராதம் அல்லது 03 மாதத்திற்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது இரு தண்டனைகளுக்கும் உள்ளாக வேண்டி நேரிடும்.
அது தவிர, 12 மாதங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தும் வகையிலான தண்டனை விதிக்கப்படும்.
மேலும், இச்சட்டத்தின் கீழ் பயணிகள் போக்குவரத்து வாகனத்தை செலுத்தும் சாரதி ஒருவர் போதையில் வாகனம் செலுத்தினால், ரூபா 25,000 - 30,000 அபராதம் அல்லது 06 மாதத்திற்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது இரு தண்டனைகளுக்கும் உள்ளாக வேண்டி நேரிடும்.
அது தவிர, அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்
இச்சட்டத்தின் கீழ் பயணிகள் போக்குவரத்து சாரதி ஒருவர், போதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தினால், ரூபா 100,000 முதல் 150,000 இலட்சம் அபராதம் விதிக்கப்படும்.
அல்லாவிடின் 2 முதல் 10 வருடங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
அது தவிர, அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் இதுவரை கைது செய்யப்பட்ட சுமார் 7,500 சாரதிகளிடமிருந்து அவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களிடமிருந்து குறைந்தபட்ச அபராத தொகையான தலா ரூபா 25,000 விதிக்கப்படும் என்பதோடு, இதன் மூலம் ரூபா 18 கோடிக்கும் அதிகமான அபராதம் ஈட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment