பருத்தித்துறை துறைமுகத்தால் வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் நன்மையடைவாா்களோ என்ற அச்சம் இருக்கின்றது, ஆகவே எமது மீனவர்களே அதனை பயன்படுத்த வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 31, 2019

பருத்தித்துறை துறைமுகத்தால் வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் நன்மையடைவாா்களோ என்ற அச்சம் இருக்கின்றது, ஆகவே எமது மீனவர்களே அதனை பயன்படுத்த வேண்டும்

பருத்தித்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதோடு நின்றுவிடாமல் எமது மீனவா்களே அதனை பயன்படுத்தும் வகையில் படகுகள் பயிற்சிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளாா்.

பருத்தித்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் தொடங்கி வைக்கப்பட்டது.

இதன்போது அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “இந்த துறைமுக அபிவிருத்தி பணிகள் தொடங்கப்பட்ட காலத்தில் பல்வேறு குழப்பங்கள் காணப்பட்டன. அவை குறித்து பல தடவைகள் பேச்சுவார்த்தைகளில் நாம் ஈடுபட்டோம்.

இன்று இந்த துறைமுகம் எந்த குழப்பமும் இல்லாமல் மக்களுடைய விருப்பத்துடன் அபிவிருத்தி செய்யப்படுவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். இறுதி நேரத்தில் எழுந்த குழப்பங்களை தீா்த்து வைத்த ஆளுநருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

சுமாா் 175 மில்லியன் ரூபாய் செலவில் இந்த துறைமுகம் புனரமைப்பு செய்யப்படுகின்றது. முதல்கட்டமாக 80 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்படவுள்ளது. மிக பெருமளவு முதலீட்டின் ஊடாக மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் எமது பருத்தித்துறை மக்களுக்கும், மீனவா்களுக்கும் பயனுள்ள ஒன்றாக அமையும்.

சரித்திர காலம் தொடக்கம் இந்த துறைமுகம் ஒரு வியாபார துறைமுகமாக இருந்து வந்துள்ளது. இங்கே சுங்க அலுவலகங்கள் இயங்கிய கட்டடங்களை இப்போதும் காணலாம்.

மேலும் பருத்தி ஏற்றுமதியில் முக்கிய இடத்தை கொண்டிருந்தமையே இந்த ஊருக்கு பருத்தித்துறை என பெயா் வரக் காரணமாகும்.

ஆகவே, இப்போது அபிவிருத்தி செய்யப்படும் இந்த துறைமுகம் எங்களுடைய மக்களால் பூரணமாக பயன்படுத்தப்பட வேண்டும். இங்குள்ள மீனவா்களை காட்டிலும் இந்த துறைமுகத்தினால் வெளிமாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்கள் நன்மையடைவாா்களோ? என்ற அச்சம் மீனவா்களிடம் இப்போதும் இருந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் எமது பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தியை எமது மீனவா்கள் அனுபவிக்க வேண்டும். இந்த துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான தீா்மானத்தை எடுத்தமைக்காக நான் ஜனாதிபதிக்கு நன்றி கூறுகிறேன்.

காலத்திற்கு காலம் பொறுப்பு வகித்த கடற்றொழில் அமைச்சா்களும் கூட இந்த துறைமுக அபிவிருத்தி விடயத்தில் மிக தெளிவாக இருந்தனா். அவா்களுக்கும் இந்த சந்தா்ப்பத்தில் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

அதேபோல் அரசாங்கம் விசேடமாக துறைசாா் அமைச்சு இந்த துறைமுகத்தை எமது மீனவா்கள் பயன்படுத்தக்கூடியவாறு, அவர்களுக்கு பாரிய படகுகள் மற்றும் பயிற்சிகளை வழங்க முன்வர வேண்டும். கடல் வளத்தை கொண்டு எங்கள் பொருளாதாரத்தை நாங்களே கட்டியெழுப்பவேண்டும்” என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment