ஏப்ரல் தாக்குதலுக்கு பின்னர் முஸ்லிம் சமூகம் தற்போது ஊடக பயங்கரவாதத்தையே எதிர்கொண்டு வருகின்றது - அமைச்சர் ரவூப் ஹக்கீம் - News View

About Us

About Us

Breaking

Monday, August 5, 2019

ஏப்ரல் தாக்குதலுக்கு பின்னர் முஸ்லிம் சமூகம் தற்போது ஊடக பயங்கரவாதத்தையே எதிர்கொண்டு வருகின்றது - அமைச்சர் ரவூப் ஹக்கீம்

ஏப்ரல் தாக்குதலுக்கு பின்னர் முஸ்லிம் சமூகம் தற்போது ஊடக பயங்கரவாதத்தையே எதிர்கொண்டு வருகின்றது. அத்துடன் ஒரு பிரிவின் சமத்துவத்தை அதிகார வர்க்கம் இல்லாமலாக்க முயற்சிக்கின்றமையே அனைத்து ஆயுத போராட்டங்களுக்கும் அடிப்படையாக இருந்திருக்கின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மூத்த பத்திரிகையாளர் கலாபூஷனம் மறைந்த க.ப. சிவத்தின் நினைவஞ்சலிக் கூட்டம் நேற்று (04) கண்டியில் இடம்பெற்றது. இதில் விசேட பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், சம உரிமை சமத்துவத்தை இல்லாமலாக்குவதிலே இன்று அதிகார வர்க்கத்தின் காலம் சென்றுகொண்டிருக்கின்றது. இதனால்தான் தேவையில்லாத பிரச்சினைகள், சர்ச்சைகள், கலவரங்களில் நாங்கள் மாட்டிக்கொள்கின்றோம். 
அத்துடன் அனைத்து ஆயுதப் போராட்டங்களுக்கும் அடிப்படைக் காரணமாக இருந்திருப்பதும் அந்த இடங்களில் அதிகாரவர்க்கம் மற்றவர்களின் சமத்துவம் சம உரிமையை இல்லாமலாக்க முற்படுவதிலாகும்.

அத்துடன் ஊடக தர்மத்தை எடுத்துப்பார்த்தால், அது தற்போது சற்றேனும் பின்பற்றப்படுவதாக இல்லை. சாதாரண விடயங்களையும் ஊதிப்பெருக்கும் விடயத்தை ஊடகங்களே மேற்கொண்டுவருகின்றன.

அச்சு ஊடகங்கள் எப்படி இருந்தபோதும் இலத்திரணியல் ஊடகங்கள் சமூகத்துக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தும் விடயங்களையே ஒளிபரப்பி வருகின்றன. அனைத்து விடயங்களையும் அரசியலாக்கும் நிலையே தற்போது இருந்து வருகின்றது.
விசேடமாக முஸ்லிம்களுக்கு எதிராக கண்டியில் அண்மையில் பாரிய போராட்டம் இடம்பெறப்போவதாக தெரிவிக்கப்பட்டதும் முஸ்லிம் அமைச்சர்களான நாங்கள் பதவிகளை துறந்து, அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தோம். 

அதன் பின்னர் இவ்வாறான பிரச்சனைகளை கட்டுப்படுத்த ஆரம்பமாக நாங்கள் மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாட தீர்மானித்தோம். மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர், நாங்கள் அடுத்து சந்திக்க தீர்மானித்தது, ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை யாகும். ஏனெனில் தேரர்களுக்கு அடுத்த படியாக ஊடகங்களினால்தான் இந்த பிரச்சினை தொடராமல் தடுக்க முடியும்.

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் வெற்றி கொண்ட பின்னர் நிரந்தர அமைதி ஏற்படும் என்றே நாங்கள் அனைவரும் நினைத்தோம். என்றாலும் நாங்கள் எதிர்பார்க்காத கும்பல் ஏற்படுத்திய நாசகார செயலால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் இன்று பாதிக்கப்பட்டு வருகின்றது. இந்த ஏப்ரல் தாக்குதலுக்கு பின்னர் முஸ்லிம் சமூகம் தற்போது எதிர்கொண்டு வருவது ஊடக பயங்கரவாதமாகும் என்றார்.

எம்.ஆர்.எம்.வஸீம்

No comments:

Post a Comment