நல்லூர் ஆலயப் பாதுகாப்புக்கு வரும் பொலிஸாருக்கு ரூ. 20 லட்சம் செலவு! - அந்த நிதியில் பெரிய அபிவிருத்தி செய்யலாம் எனப் பல தரப்பும் அதிருப்தி - News View

About Us

About Us

Breaking

Monday, August 5, 2019

நல்லூர் ஆலயப் பாதுகாப்புக்கு வரும் பொலிஸாருக்கு ரூ. 20 லட்சம் செலவு! - அந்த நிதியில் பெரிய அபிவிருத்தி செய்யலாம் எனப் பல தரப்பும் அதிருப்தி

யாழ்.நல்லூர் ஆலயத் திருவிழாவில் பாதுகாப்புக்கு வருகை தந்துள்ள 650 பொலிஸாருக்கு யாழ்ப்பாண மாநகர சபை 20 இலட்சம் ரூபா பணம் செலவிடவுள்ளது என்றும், குறித்த 20 இலட்சத்தில் மாநகர சபையில் ஓர் அபிவிருத்திப் பணியை மேற்கொள்ள முடியும் என்றும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு பாதுகாப்புப் பணிக்காக வருகை தந்துள்ள 650 பொலிஸாரும் 5 பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கியுள்ள பாடசாலைகளுக்கான மின்சார வசதி, தங்குமிடவசதி ஆகியவற்றுடன் பொலிஸாரின் குளியல் மற்றும் பொதுப் பாவனைக்கான தண்ணீர் வசதிகளும் மாநகர சபையே ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

குறித்த 650 பொலிஸாருக்கும் தினமும் இரு நேர தேநீர், சிற்றுண்டி, குடிதண்ணீர்ப் போத்தல் என ஒரு பெரும் தொகையே செலவு ஏற்படுகின்றது. இவ்வாறு ஏற்படும் செலவுகளில் குடிதண்ணீருக்காக 2 இலட்சத்து 60 ஆயிரத்து 780 ரூபாவும், பிஸ்கட் வழங்குவதற்கு 5 இலட்சத்து 7 ஆயிரம் ரூபாவும், தேநீர்ச் செலவாக 5 இலட்சம் ரூபாவும் ஏனைய செலவாக 60 ஆயிரம் ரூபாவும் தேவைப்படுகின்றது. மற்றும் பிற இதர செலவுகளுடன் 20 இலட்சம் ரூபா செலவு ஏற்படும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு கடமைக்குச் சமுகமளிக்கும் பொலிஸாருக்கு மடுத் திருத்தலம் போன்றவற்றில் உள்ளூராட்சி சபைகள் நிதிச் செலவு செய்கின்றனவா என்று ஆராயப்பட்டதில் அவ்வாறு எந்தச் செலவும் உள்ளூராட்சி சபை மேற்கொள்வதில்லை என்றே கண்டறியப்பட்டது. அதனால் இந்த நிதியில் பெரு அபிவிருத்திகளைச் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, முன்னைய வருடங்களைப் போலன்றி நல்லூர் இந்த முறை கச்சான் கடை நடத்துவதற்கான ஏலமிடப்பட்டபோது 10 ஆயிரம் ரூபாவிலிருந்து 30 ஆயிரம் ரூபாவுக்கிடையிலான தொகையே கேட்கப்படும் அளவுக்கு நிலைமை உள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் சுமார் 75 ஆயிரம் ரூபாவுக்கு ஏலம் கேட்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

Charles Ariyakumar Jaseeharan

No comments:

Post a Comment