தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவுறுத்தல் : பரீட்சை நிலையங்களுக்குள் நுழைய, கையடக்க தொலைபேசி தடை - பரீட்சை முடிந்த பின்னரும் வினாத்தாள் இரகசிய ஆவணம் - முறைப்பாடு செய்யலாம் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 3, 2019

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவுறுத்தல் : பரீட்சை நிலையங்களுக்குள் நுழைய, கையடக்க தொலைபேசி தடை - பரீட்சை முடிந்த பின்னரும் வினாத்தாள் இரகசிய ஆவணம் - முறைப்பாடு செய்யலாம்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நாளை (04) இடம்பெறவுள்ள நிலையில் பரீட்சைகள் தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் அறிவுறுத்தல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜிதவினால் குறித்த அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பரீட்சை நிலையங்களுக்குள் நுழைய தடை
நாளை (04) முற்பகல் 9.30 முதல் நண்பகல் 12.00 மணி வரையான பரீட்சை இடம்பெறவுள்ள காலப் பகுதியில், பரீட்சை மத்திய நிலையங்களாக செயற்படும் பாடசாலை வளாகத்தினுள் ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கும் மாத்திரம் அனுமதி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அனுமதி வழங்கப்படாத எவரும் பரீட்சை மத்திய நிலையங்களுக்குள் நுழையக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இக்காலப்பகுதியில் அதிபர் காரியாலயமும் மூடப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

கையடக்க தொலைபேசி தடை
பரீட்சை இடம்பெறும் காலப் பகுதியில், பரீட்சை மத்திய நிலையங்களில் கடமையில் ஈடுபட்டுள்ள, கண்காணிப்பாளர்கள் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.

பரீட்சை முடிந்த பின்னரும் வினாத்தாள் இரகசிய ஆவணம்
அத்துடன், பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னரும், புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் இரகசிய ஆவணமாகவே கருதப்படும் எனவும், வினாத்தாள்களை வைத்திருத்தல், பிரதி செய்தல், பிரதியை பெற்றுக் கொள்ளல், விற்பனை செய்தல், அச்சிடல், பத்திரிகைகளில் அல்லது சஞ்சிகைகளில் அல்லது வேறேதேனும் அச்சு ஊடகங்களில் அச்சிட்டு வெளியிடுதல், இணையத்தில் அல்லது சமூக வலைத்தளங்களில் அல்லது வேறேதேனும் வகையில் வெளியிடுதல் ஆகியன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

முறைப்பாடு செய்யலாம்
மேற்கூறப்பட்ட விடயங்களில் எவரேனும் ஒருவர் அல்லது நிறுவனம் இதனை மீறும் நிலையில், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில், பொலிஸ் தலைமையகத்தில் அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கு தொலைபேசி மூலம் முறையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்கள உடனடி அழைப்பு இலக்கம் : 1911

பாடசாலை பரீட்சைகள் ஒழுங்குசெய்யும் பிரிவு : 011-278 4208, 011-2784537, 011-3188350, 011-3140314

பொலிஸ் தலைமையகம் : 011-2421111/119

நாளை (04) இடம்பெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்காக 2,995 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, 3 இலட்சத்து 39 ஆயிரத்து 360 மாணவர்கள் ( 339,360) பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

No comments:

Post a Comment