அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பசுக்களில் 40 வீதமானவை உயிரிழப்பு - ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நேரில் சென்று ஆராய்வு - News View

About Us

About Us

Breaking

Thursday, August 1, 2019

அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பசுக்களில் 40 வீதமானவை உயிரிழப்பு - ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நேரில் சென்று ஆராய்வு

அவுஸ்திரேலியாவில் இருந்து கிராமிய அபிவிருத்தி மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 2017ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு பாற்பண்ணையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட கறவை பசுக்களில் 40 சதவீதமான பசுக்கள் உயிரிழந்துள்ளதாக ஐனாதிபதியின் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அதற்கமைய ஜனாதிபதியின் விசேட விசாரணை ஆணைக்குழுவினர் அண்மையில் பரிசோதனைக்காக மஸ்கெலியா லெமன்மோரா தோட்டத்தில் அமைக்கப்பட்ட பண்ணையை பார்வையிட சென்றிருந்தனர்.

இளைப்பாரிய நீதிபதி உப்பாலி அபேயரத்ன தலைமையில் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினர் அங்கு சென்று நிலைமைகளை கண்டறிந்தனர். 

அவுஸ்திரேலியாவில் இருந்து கிராமிய அபிவிருத்தி மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1994 கறவை பசுக்களும், அதே வருடம் டிசம்பர் மாதம் 27ஆம் திகதி 3024 கறவை பசுக்களும் கப்பல் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு பாற் பண்னையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. 

ஒரு கறவை பசுவின் விலை 52,7000 ரூபாய் அரசாங்கம் பாற்பண்ணையாளர்களை ஊக்குவிக்கும் முகமாக 200,000 ரூபாய்க்கு வழங்கியது. 

எனினும் இவ்வாறு வழங்கப்பட்ட கறவை பசுக்களில் 40 வீதமானவை இறந்துள்ளதாக பாற் பண்ணையாளர்கள் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளனர். 

இந்த பசுக்கள் தொடர்பாக தமக்கு பொய்யான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தம்மை ஏமாற்றி வஞ்சித்ததாகவும் பாற்பண்ணையாளர்கள் முறையிட்டுள்ளனர். 

அவர்களின் முறைப்பாட்டில் கறவை பசுக்களும், அதன் கன்றுகளும் மைக்கோ பிலஸ்மா மற்றும் பீவீபி என்ற நோயால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும், தம்மை ஏமாற்றியவர்களுக்கு தண்டனை பெற்று கொடுக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளனர். 

அதற்கமைய ஜனாதிபதியின் விசேட விசாரணை ஆணைக்குழுவில் இளைப்பாரிய நீதிபதி உப்பாலி அபேயரத்ன தலைமையில் ஐவர் கொண்ட நீதிபதிகள் குழுவினை சந்தித்து 2019 பெப்ரவரி மாதத்திலிருந்து சாட்சிகள் மற்றும் முறைப்பாட்டை பதிவு செய்ய ஆரம்பித்தனர். 

ஐனாதிபதியின் விசாரணை பிரிவின் தலைவரான நீதிபதி உப்பாலி அபேயரத்ன தலைமையிலான நீதிபதிகள் கொண்ட குழுவினர் கடந்த 19ஆம் திகதியன்று பரிசோதனைக்காக மஸ்கெலியா லெமன்மோரா தோட்டத்தில் அமைக்கப்பட்ட பண்ணையை பார்வையிட சென்றிருந்தனர். 

மஸ்கெலியா லெமன்மோர் தோட்டத்தில் அமைக்கப்பட்ட பாற் பண்ணையை பார்வையிட்ட பின்னர் அங்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளையும், சாட்சியங்களையும் பரிசீலித்தனர். 

இது தொடர்பில் லெமனடமோர் பண்ணையாளர் அமல் சூரிய தெரிவிக்கையில் நாள்தோறும் பண்ணையில் கறவை பசுக்கள் இறந்தவண்ணமுள்ளன. 200 பசுக்களில் 60 பசுக்கள் இறந்துவிட்டன. இது தொடர்பில் கால்நடை அபிவிருத்தி அமைச்சிடம் கேட்டோம்.

அது இரண்டு நாட்டுக்கும் இடையிலான இரகசிய ஒப்பந்தம் அதை வெளிப்படுத்த முடியாது என தெரிவித்தனர்.

இலாபத்தை மட்டும் கருத்திற் கொண்டு அன்றைய அரசாங்கம் எம்மை படுகுழியில் தள்ளியது. பசுக்கள் சினைபட்டாலும் அவை கன்று பிரசவிப்பதில்லை.

கரு தரிக்கும் காலத்திலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகின்றன. அதற்கான காப்புறுதி​யோ, நஷ்டஈடோ வழங்குவதில்லை. எனவே பண்ணையாளர்கள் 26 பேரும் இணைந்து நீதிமன்றத்தை நாட உள்ளோம் என அவர் தெரிவித்தார்.

மஸ்கெலியா  நிருபர்

No comments:

Post a Comment