அண்மையில் காத்தான்குடி நகரசபையின் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் காத்தான்குடி நகர சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கு நான் இழுத்தடிப்பு செய்வதாக காத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் ஒரு பதிவை இட்டிருந்தார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விடயமாகும்.
உண்மையில் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு அப்போது தேர்தலை முன்னின்று நடாத்தியவர்களின் பிழையான வழிகாட்டலினால் வட்டார ரீதியான ஆசனங்களை வெல்ல முடியாது விகிதாசார முறை ரீதியான ஆசனங்கள் மூன்றினையே வென்றது.
இந்த விகிதாசார முறை ரீதியிலான ஆசனத்திற்காக பெண் உறுப்பினர் ஒருவர் போக மீதி இரண்டு ஆசனங்களுக்கும் யாரை நியமிப்பது என்பது தொடர்பிலான ஆலோசனைக்கூட்டம் அப்போது இடம்பெற்ற போது முதல் வருடத்துக்கு துறை சார்ந்த அனுபவமுள்ள இருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கருத்து தெரிவித்த நான் காத்தான்குடி பிரதேசத்தை பொறுத்த வரையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு உள்ளூராட்சி மன்ற அதிகாரம் மாத்திரமே அரசியல் ரீதியாக காணப்படுகிறது. எதிர்வரும் மாகாண சபை தேர்தல் வருகின்ற வரையிலும் அனுபவமான இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு செயற்பட வேண்டுமென்றும் மாகாண சபை தேர்தலில் களம் இறங்குகின்ற போது அப்பதவியினை இராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடுவதோடு மற்றைய இரண்டு உறுப்பினர்களுக்கு அப்பதவி வழங்கப்பட வேண்டுமென எனது ஆலோசனையை முன்வைத்திருந்தேன். இவ் ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மாகாண சபை தேர்தல் நடைபெறும் காலம் தொடர்பான கதையாடல்கள் இடம்பெற்றபோது மாகாண சபை தேர்தல் வரையிலும் உறுப்பினர்களாக நீடிப்பது என்றும் தேர்தல் நடைபெறாமல் காலம் நீடிக்குமாயின் பொருத்தமான காலத்தில் நகரசபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வது என்ற முடிவு எட்டப்பட்டு நானும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்களும் அப்பதவிகளுக்கு நியமிப்பதாக தீர்மானிக்கப்பட்டது.
உண்மையில் இந்த தீர்மானங்களை எடுக்க வேண்டியவர்களாக கட்சியின் தேசிய தலைவரும், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் நயீமுல்லாஹ் ஆகியோரே இருந்த போதிலும் எல்லோரும் தேர்தலில் போட்டியிட்டவர்கள் என்ற அடிப்படையில் இந்த மசூறா ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட மறுதினமே எடுக்கப்பட தீர்மானங்களை மீறி என்னை குறித்த நகரசபை பதவிக்கு நியமிக்கக்கூடாது என்று தலைவரிடத்திலும் நயீமுல்லாஹ்விடத்திலும் பல்வேறு அழுத்தங்களை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தொடராக தொடுத்தார்.
தேசிய தலைவர் றவூப் ஹக்கீம் மற்றும் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் நயீமுல்லாஹ் ஆகியோரிடம் என்னை குறித்த பதவிக்கு நியமிக்க வேண்டாமென தெரிவித்ததோடு தன்னோடு புதிய ஒருவரை உறுப்பினராக நியமிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
எனினும் கட்சி ரீதியான அனுபவமிக்க தேசிய கொள்கை பரப்புச் செயளாலரே மாகாண சபை தேர்தல் வரும் வரையிலும் உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும் என்பதில் கட்சியின் தலைவர் உறுதியாக கூறியதுடன் கட்சி தலைமையகமான தாறுஸ்ஸலாமில் இது தொடர்பில் நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே காத்தான்குடி நகரசபை உறுப்பினராக என்னை நியமிப்பதென ஷிப்லி பாறூக் தலைமையிலான குழுவினரின் முன்னிலைளியே தலைவர் தீர்மானத்தை அறிவித்தார்.
உண்மையாக எல்லோரையும் வைத்து எடுக்கப்பட தீர்மானம் மறுநாளே தனிப்பட்ட ரீதியாக ஷிப்லி பாறூக்கினால் மீறப்பட்டு முனாபிக் தனமாக நடந்துகொண்டார்.
இதனிடையே ஷிப்லி பாறூக் எந்த இயக்கமும் இல்லாமல் நகரசபை உறுப்பினர் பதவியை வைத்துக்கொண்டு எந்த செயற்பாடுகளும் இல்லாமல் வீட்டில் முடங்கிக்கிடந்தார். நகரசபையில் இவரது பங்களிப்பு பெரிதாக இருக்கவில்லை. இதனிடையே அவரின் வீட்டுக்கு நான் சென்று கட்சியை காத்தான்குடியில் புனரமைக்க வேண்டும், கிளைகள் அமைக்க வேண்டுமென அழைப்பு விடுத்தேன். செய்வோம் என எற்றுக்கொண்ட பின்னர் திடீரென எனக்கு தெரியாமல் தனது ஒரு சில ஆதரவாளர்களை மாத்திரம் வைத்துக்கொண்டு கிளைகளை அமைக்க தொடங்கினார். பல கட்சி ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதனிடையே ஒரு வருடம் கடந்த நிலையில் நகரசபை உறுப்பினர் பதவியை நான் இராஜினாமா செய்ய வேண்டுமென என்னோடு பேச மர்சூக் அகமட் லெப்பை தலைமையில் ஒரு குழுவினர் எனது வீட்டுக்கு வந்தனர். அவர்களுக்கு நான் நகரசபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய ஆயத்தமாக இருக்கின்றேன். அதற்கு முன்பாக கட்சிக்குள் பல குழப்பங்களை ஷிப்லி ஏற்படுத்தியிருக்கிறார். இவர் கட்சி மாறப்போவதாக கதை அடிபடுகிறது.
எனவே அவருடன் ஒரு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இது தொடர்பில் கவிஞர் சாந்தி முகைதீன் ஜே.பி முயற்சி எடுத்து வருகிறார். சகல விடயங்களையும் மனம் திறந்து பேசி கட்சியை ஒழுங்கான முறையில் கொண்டுசெல்ல ஒரு பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்ய கோரினேன். இது தொடர்பில் ஷிப்லியை சந்தித்த அக்குழுவினர் மீண்டும் என்னை சந்தித்து அப்படியொரு பேச்சு வார்த்தை தேவையில்லை என ஷிப்லி சொன்னதாகவும் நான் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டுமென்றே கோரினர்.
நானும் மாகாண சபை தேர்தல் வரையிலும் கட்சி பணியை நகர சபை உறுப்பினர் என கோதாவில் ஆற்றிக்கொண்டிருந்தேன். இருந்தாலும் மாகாண சபை தேர்தல் நடாத்தப்படாது கால நீடிப்பு செய்யப்படுவதன் காரணமாக எனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்து கட்சியின் தேசிய தலைவரோடு இது தொடர்பில் கலந்துரையாடிய போது அவர் சற்று பொறுக்குமாறு என்னை பணித்தார்.
கால நீடிப்பு காரணமாக நான் ஏற்கனவே எனது பதவியினை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ள போதும் நான் இராஜினாமா செய்வதற்கு இழுத்தடிப்பு செய்வதாக உண்மைக்கு புறம்பான ஒரு செய்தியை இட்டு என்மீது பிழையான அபிப்ராயங்களை உண்டாக்க முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் முயற்சித்துள்ளார்.
அதுபோலவே என்னைப்பற்றி மோசமான கருத்துக்களை போலியான முகநூல்களில் (Fake id) பதிவுகளை இட்டு என்னை ஊழல் வாதியாகவும், மோசமானவனாகவும் சித்தரிக்க தொடரான முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார். இந்த முகநூல் பக்கங்களின் உள்ளே சென்று விடயங்களை பார்த்தால் எந்த முகநூல் பக்கங்களிலும் உண்மையான நபர்களின் புகைப்படங்களோ அல்லது ஏனைய எந்த விடயங்களுமே இல்லை. இவ்வாறு போலியான முகங்களை கொண்டு என்மீது பழி சுமத்த முனைபவர்களை அல்லாஹ்விடம் பொறுப்பு சாட்டியிருக்கின்றேன். அல்லாஹ்வே அவர்களுக்குரிய தண்டணையினை வழங்குவானாக!
நான் நகரசபை உறுப்பினராக தற்போது செயற்பட்டு ஊருக்கு பல காத்திரமான பணிகளை ஆற்றி வருகின்றேன். நகர சபையின் தவிசாளர் கௌரவ.எஸ்.எச்.எம்.அஸ்பர் அவர்களிடமும் ஏனைய உறுப்பினர்களிமும் இது தொடர்பில் தெளிவு பெற்றுக்கொள்ள முடியும். நகரசபை தவிசாளருக்கு என்னுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கி, என்னுடைய அனுபவங்களை பகிர்ந்து பணியாற்றி வருகின்றேன். அதுபோலவே அபிவிருத்தி பணிகளையும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றேன்.
கடந்த வருடம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா அவர்களினூடாக இரண்டரை கோடி ரூபா அளவிலான அபிவிருத்திகளையும் கௌரவ தேசிய தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களினூடாக பல்வேறு நிதியினையும் கொண்டுவந்து ஊரில் அபிவிருத்திகள் செய்து முடித்திருப்பதோடு இந்த வருடமும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா அவர்களினூடாக காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நான்கு கோடி நாட்பது இலட்சம் ரூபா பெறுமதியான அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றேன்.
அதுபோலவே நூற்றுக்கணக்கான சமூர்த்தி பயனாளிகளுக்கு சமூர்த்தி பயனாளி அட்டைகளை வழங்க ஏற்பாடுகள் செய்திருக்கின்றேன். பல பேருக்கான தொழில் வாய்ப்புக்களை பல்வேறு அமைச்சுக்கள் ஊடாகவும் பெற்றுக்கொடுக்கவும் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளேன். இவ்வாறு பல காத்திரமான பணிகளை ஆற்றி வருகின்றேன்.
மாறாக எங்கள் கட்சியின் சக நகரசபை உறுப்பினர் இவ்வாறான பணிகளை முன்னெடுத்தாரா என்பது எனக்கு தெரியவில்லை. குறிப்பிட்ட சில காலம் நகரசபை உறுப்பினர் என்ற பதவியோடு வீடுகளுக்குள்ளே முடங்கிக்கிடந்தார். ஆனால் நகரசபையின் தவிசாளர் முன்னெடுக்கும் ஒவ்வொரு பணிகளிலும் என்னுடைய காத்திரமான பங்களிப்பு இருந்தே வந்துகொண்டிருக்கிறது.
அதுபோலவே நாட்டில் அண்மையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தின் பின்னர் காத்தான்குடியில் பதற்றமான பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்ட போது ஊரின் முக்கிய அரசியல் பிரமுகர்களே செயற்பட முடியாத வண்ணம் காணப்பட்ட போது இந்த ஊருக்காக மிகக்கடுமையாக உழைத்தேன். முழு மூச்சாக பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், உலமா சபை மற்றும் இதர சிவில் அமைப்புக்களோடு இணைந்து பணியாற்றி சகல பேச்சுவார்த்தைகளிலும் கலந்து கொண்டு இந்த ஊருக்காக ஊரின் சுமூக நிலமைக்காக குரல் கொடுத்தேன்.
கைது செய்யப்பட்டவர்களின் விடுதலைக்காக தொடராக பாடுபட்டு வருகின்றேன். அப்போது ஆழுநராக பதவி வகித்த கௌரவ.ஹிஸ்புல்லாஹ் அவர்களை சந்தித்த போது நீங்கள் கடுமையாக பாடுபடுவதாக வாழ்த்துக்கூறி என்னை ஊக்கப்படுத்தினார்.
இவ்வாறு நான் ஆற்றிய பணிகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக போலியான முகநூல்களில் விமர்சித்து வருகின்றார். எதிர்கால மாகாண சபை தேர்தலை இலக்கு வைத்தே என்மீது சேறு பூசப்படுகிறது. அவர்களுக்கு அல்லாஹ் தண்டணையினை வழங்க வேண்டுமென மீண்டுமொருமுறை பிரார்த்தித்து பொறுப்பு சாட்டுகின்றேன். இவரின் ஊழல்கள் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் என்னிடத்தில் உள்ளபோதிலும் இவற்றை போலி முகநூல்களில் வெளியிட்டு அரசியல் நாகரீகம் தவறி நடக்க நான் ஒருபோதும் விரும்புவதில்லை.
கட்சியின் போராளிகள் அதேபோல மாற்று கட்சிகளின் ஆதரவாளர்கள் கூட நான் இப்பதவியில் தொடர வேண்டுமென கோரிக்கைகளை விடுத்து வந்தாலும் இறுதியாக என்னை இந்த பதவிக்கு நியமித்த கௌரவ தேசிய தலைவர் அவர்களின் ஆலோசனைக்கமைய நான் எனது பதவியினை இராஜினாமா செய்வேன் என்பதை உறுதியாக கூறிக்கொள்கின்றேன்.
பதவிக்கு நியமித்த தலைவரை தவிர வேறு யாரும் சொல்லி பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. காத்தான்குடி நகரசபை தலைவராக, மாகாண சபை உறுப்பினராக சமாதான செயலக பணிப்பாளராக ஒரு பெரிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரின் இணைப்புச் செயலாளராக பல பதவிகளை வகித்த எனக்கு நகரசபை உறுப்பினர் பதவி ஒரு பொருட்டல்ல.
என்னை அரசியலிலிருந்து ஓரங்கட்ட ஷிப்லி பல்வேறு முயற்சிகளை எடுக்கிறார். இதை எழுதப்போனால் பதிவு நீண்டுவிடும். நான் தலைவரின் ஆலோசனை பெற்று எனது பதவியை இராஜினாமா செய்வேன் என்பதை தெரியப்படுத்துகிறேன்.
யு.எல்.எம்.என்.முபீன்
தேசிய கொள்கை பரப்புச் செயலாளர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
No comments:
Post a Comment