மரண தண்டனைக்கு நாம் கொள்கையளவில் எதிரானவர்கள் எனினும் தற்போதைய நிலையில் போதைப் பொருள் வர்த்தகத்தை ஒழிக்க வேண்டுமானால் மரண தண்டனையை நிறைவேற்றியே ஆக வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
மரண தண்டனையை நாட்டின் சட்டப் புத்தகத்திலிருந்து இல்லாதொழிப்பதற்கு யோசனைகளை முன்வைக்கப் போவதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் யோசனை மூலம் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடியாது. அவ்வாறு கொண்டு வர வேண்டுமென்றால் சட்டமா அதிபரினால் தயாரிக்கப்பட்ட ஆலோசனை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற ஆவணத்தை நீதிமன்றம் மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியே அதனை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
பொரளை என். எம்.பெரேரா மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த வாசுதேவ எம்.பி.,
கூட்டு எதிரணி எம்.பி. ரொஷான் ரணசிங்கவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எமது கட்சி கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
அதேவேளை, உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து சம்பந்தப்பட்ட சிலருக்கு எதிராக குற்றங்களை நிரூபிக்க முடியாமல் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கை முழுமையற்றது என சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிணங்க நீதிமன்றம் விசாரணையை நடத்திச் செல்ல வேண்டும். அது தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள கூற்றை ஏற்கமுடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment