இலங்கை மின்சார சபைக்கு 100 பில்லியன் ரூபா வரை கடனுக்கு எரிபொருள் வழங்க இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனம் எடுத்துள்ள தீர்மானம் தொடர்ந்தும் பணிப்பாளர் சபையின் பேச்சு மட்டத்திலேயே இருப்பதாக தெரியவருகிறது.
அத்துடன் இலங்கை மின்சார சபை தனது கட்டணங்களை இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனத்துக்கு திருப்பிச் செலுத்த இதுவரை முன்வரவில்லையென்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனினும் இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் வழங்கும் கடன் எல்லையை அதிகரிக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விருப்பம் தெரிவித்துள்ளபோதும் இதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை அங்கீகாரம் அளிக்கவில்லை. எதிர்வரும் இரண்டு வாரங்களில் பணிப்பாளர் சபை இவ்விடயம் தொடர்பில் கூடி ஆராயுமென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மின்சார சபை தனது கட்டணத்தை செலுத்துவது தொடர்பில் இன்னும் உறுதியானதொரு நிலைப்பாட்டில் இல்லையென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தின் பொருளாளரான பொறியியலாளர் மனு ஜயவர்தன தெரிவித்தார்.
கடந்த வாரம் இலங்கை மின்சார சபை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கடனை மீளச் செலுத்துவதற்காக இலங்கை வங்கியிடம் 10 பில்லியன் ரூபாவை கடனாக கோரியிருந்தது.
எனினும் நிதி அமைச்சு இக்கடனை வழங்க முன்வராமல் இலங்கை மின்சார சபைக்கு கடன் பெற்றுக்கொள்ளுமாறு திறைசேரி கோரியிருப்பது நியாயமற்ற செயற்பாடாகுமென மின்சார சபையின் ஊழியர்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.
எவ்வாறாயினும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் மாதாந்த அடிப்படையில் செலுத்த வேண்டிய தொகையை மீளச் செலுத்துமாறு இலங்கை மின்சார சபையை கேட்டுக்கொண்டது.
மின்சார சபை 80 பில்லியன் ரூபா கடன் எல்லையை மீறியதனால் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் வழங்குவதை நிறுத்தியது. இதனால் நாடு முழுவதும் சீரான மின்விநியோகம் தடைப்பட்டது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு கட்டணம் செலுத்த திறைசேரி ஒரு வருடத்துக்கு அதிக காலம் தவறியிருப்பதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கட்டணங்களை திருப்பிச் செலுத்துவதற்காக இலங்கை மின்சார சபைக்கு இரண்டு வார காலத்துக்கு அவகாசம் வழங்கியுள்ளது.
இந்த இரண்டு வாரத்துக்குள் கட்டணம் செலுத்தப்படும் வரை எரிபொருளை விநியோகிக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
எரிபொருள் விநியோகம் தொடர்ந்து முன்னெடுக்கப்படாவிட்டால் இலங்கை மின்சார சபைக்கு சில மின் உற்பத்தி நிலையங்களை மூட வேண்டிய நிலை உருவாகுமென்றும் அதன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment