தெற்கு கடற்கரைப் பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிப்பு மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக நேற்று முன்தினமிரவு கஹவ, கொடகம பிரதேசத்தில் காலி வீதியை கடலலைகள் முற்றுகையிட்டன. பிரதான வீதிக்கு மேலாக பாரிய அலைகள் மேலெழுந்ததால் காலி வீதியின் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டது.
கடலலையில் அள்ளுண்டு வந்த மணலுடன் கழிவுப் பொருட்களும் வீதியின் மத்தியில் குவிந்த தால் ஒருவழிப்பாதை சில மணி நேரம் தடைப்பட்டது.
அதனையடுத்து பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் துப்பரவு பணிகளை மேற்கொண்டு வீதியை துப்பரவு செய்த பின்னரே போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பின.
இதேவேளை, கடல் கொந்தளிப்பு காரணமாக எதிர்வரும் சில தினங்களுக்கு நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் இரண்டு மீற்றர் உயரத்துக்கு கடலலைகள் எழுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி டேர்னி பிரதீப் குமார தெரிவித்தார்.
கடந்த சில தினங்களாக தெற்கில் உனவட்டுன, பலப்பிட்டிய, தல்பே ஆகிய பிரதேசங்களில் பாரிய கடலலைகள் எழுந்துள்ளதுடன் வீடுகள் பலவும் சேதமடைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
நிலைமை வழமைக்குத் திரும்பும் வரை மீனவர்கள் மற்றும் கடற்படையினரை விழிப்புடன் செயற்படுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன் கரையோரங்களில் வாழ்வோர் தமது பாதுகாப்பு தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சாக்கு மூடைகளை அடுக்கி தடுப்பு அணைகளை அமைத்து தமது சொத்துக்களைப் பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் கடற்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்வோரும் கடலில் குளிக்கச் செல்வோரும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.
இக்காலப்பகுதியில் காலை 9.30 மணி மற்றும் இரவு 10 மணியளவிலும் 2.4 மீற்றர் உயரத்துக்கு அலைகள் எழலாமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடல் கொந்தளிப்பு காணப்படுகின்றபோதும் நேற்று பெளர்ணமி தினம் ஆகையால் அலைகளின் தாக்கம் கடுமையாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் புத்தளத்திலிருந்து கொழும்பு, காலியூடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற் பிரதேசத்தில் 2.5 தொடக்கம் 3.5 மீற்றர் வரையான பாரிய அலைகள் எழும்புவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் இப்பகுதிகளில் கடல் கொந்தளிப்பு காணப்படும் என்பதால் கடற்படையினரும் மீனவர்களும் அவதானத்துடன் இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
லக்ஷ்மி பரசுராமன்
No comments:
Post a Comment