மருத்துவ அதிகாரிகள் சங்கத்திடமிருந்து ஒரு பில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
3 வார காலத்தினுள் நஷ்டஈட்டு தொகையை வழங்காவிட்டால் அவமதிப்பு வழக்கு தொடரப் போவதாகவும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
1994 முதல் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படும் அமைச்சர் ராஜித பல்வேறு அமைச்சுகளின் கீழ் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
நல்லாட்சி அரசு உருவாக முக்கிய பங்காற்றிய அவர் தேசிய மட்டத்தில் குறிப்பிடத்தக்க பிரபலமான நபராகும் எனவும் கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபன உப தலைவராகவும் செயற்படும் டொக்டர் ராஜித சேனாரத்ன குறித்து மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ள சில கருத்துகள் அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக இருக்கின்றன.
மருந்து இறக்குமதியின் போது 20 பில்லியன் ரூபா அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகவும் தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதாகவும் 'சுவபத் கிருள' நிகழ்ச்சிக்கு அரச நிதியை வீணாக்கியமை உட்பட பல அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை மருத்துவர் சங்கம் கூறியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துகள் ஊடகங்களில் வெளியானதால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும். தேசிய மட்ட தேர்தல் நெருங்குகையில் சுகாதார அமைச்சரின் நற்பெயரை களங்கப்படுத்த மருத்துவர் சங்கம் பிரசாரம் ஆரம்பித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் பொய்ப்பிரசாரங்கள் வெளியிட வேண்டாம் எனவும் நஷ்ட ஈட்டு தொகையை வழங்காவிட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment