அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : ஜே.வி.பி ஏனைய கட்சிகளுடன் பேச்சு - 10,11ஆம் திகதிகளில் சபையில் விவாதம் - News View

About Us

About Us

Breaking

Monday, July 1, 2019

அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : ஜே.வி.பி ஏனைய கட்சிகளுடன் பேச்சு - 10,11ஆம் திகதிகளில் சபையில் விவாதம்

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 10ஆம் 11ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்ள பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் ஜே.வி.பி. தீவிர கலந்துரையாடல்களை நடத்திவருவதாக கட்சியின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிந்தது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும் அரசாங்கம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியே அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஜே.வி.பி. சமர்ப்பித்தது.

எதிர்க்கட்சித் தலைவர் இந்தப் பிரேரணைக்கு ஆதரவளிப்பார் என்று அக்கட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது. என்றாலும், எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோர் அரசுக்குச் சார்ப்பாகவே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளனர்.

விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் ஜே.வி.பி. ஆதரவு கோரும். பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் அக்கட்சியின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிந்தது. 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment