ஊடகங்கள் நீதிமன்றங்களாக செயற்பட முடியாது, டாக்டர் ஷாபி தொடர்பான விவகாரத்தை பூதாகாரப்படுத்தியதும் ஊடகங்களே - அமைச்சர் இரான் விக்கிரமரட்ண - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 16, 2019

ஊடகங்கள் நீதிமன்றங்களாக செயற்பட முடியாது, டாக்டர் ஷாபி தொடர்பான விவகாரத்தை பூதாகாரப்படுத்தியதும் ஊடகங்களே - அமைச்சர் இரான் விக்கிரமரட்ண

ஊடகங்கள் நீதிமன்றங்களாக செயற்பட முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரட்ண தெரிவித்தார். அவ்வாறு செயற்பட்டால் ஜனநாயக நாட்டில் நிலைமைகள் மோசமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார். 

சர்ச்சைக்குரிய குருநாகல் டாக்டர் மொஹமட் ஷாபி உண்மையில் குற்றமிழைத்திருந்தால் நீதிமன்றத்தின் மூலம் அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கத்துக்கு மாற்றுக்கருத்து கிடையாது. எனினும் ஊடகத்தின் தீர்ப்பின்றி முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். 

அதேவேளை பாதிக்கப்பட்ட பெண்கள் விஞ்ஞான ரீதியாகத் தம்மை பரிசோதிப்பதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் கொழும்பு காசல் மருத்துவமனை உட்பட இரண்டு மருத்துவமனைகளில் மேற்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் அங்கு பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். உண்மை நிலையை அறிந்து கொள்ளவே அரசாங்கமும் எதிர்பார்த்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

எல்லாக்காலத்திலும் ஊடகங்கள் வழங்கும் தீர்ப்பை மக்கள் ஏற்கும் நிலையே உள்ளது எனக் குறிப்பிட்ட அவர், அது தனிப்பட்ட மனிதர்களின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். அரசாங்கம் இது விடயத்தில் தெளிவுடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் குருநாகல் டாக்டர் ஷாபி தொடர்பான விவகாரத்தை பூதாகாரப்படுத்தியது ஊடகங்களே. அவர் பெண்களுக்கு தவறான கருத்தடையை மேற்கொண்டிருந்தால் மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம். 

இப்போது நாட்டில் ஊடகங்களே நீதிமன்றங்களாகியுள்ளன, தீர்ப்பையும் வழங்குகின்றன. எனினும் தவறு நிரூபிக்கப்படாமல் தீர்ப்பளிப்பது நல்லதல்ல. 

டாக்டர் ஷாபி தொடர்பில் தினமும் நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன. இந்நாட்களில் சம்பந்தப்பட்ட சில பெண்கள் தாம் அழுத்தங்களுக்கு மத்தியிலேயே முறைப்பாடுகளை முன் வைத்துள்ளதாக தெரிவித்து வருகின்றனர். இதை ஊடகங்களில் பார்த்து நாம் எந்த முடிவுக்கும் வருவது தவறு.

டாக்டருக்கு மனைவி பிள்ளைகள் உள்ளனர். அவர் தொடர்பில் பரப்பப்படும் விமர்சனங்களினால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது பெண்கள் உரிமை தொடர்பான பிரச்சினை என்பதால் நாம் இதில் கூடிய கவனம் செலுத்தியுள்ளோம்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment