முஸ்லிம் இளைஞர்களுக்கு கல்முனை மாநகர முதல்வர் விடுக்கும் அன்பான வேண்டுகோள்..! - News View

About Us

About Us

Breaking

Monday, June 3, 2019

முஸ்லிம் இளைஞர்களுக்கு கல்முனை மாநகர முதல்வர் விடுக்கும் அன்பான வேண்டுகோள்..!

நாட்டின் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு பட்டாசு கொழுத்துவதையும் களியாட்ட செயல்களில் ஈடுபடுவதையும் எமது கல்முனை மாநகர பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ளுமாறு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த வேண்டுகோளில் அவர் மேலும் அறிவுறுத்துவதாவது பெருநாளை வரவேற்பதற்காக பட்டாசு கொழுத்துதல், வீதிகளில் விளையாடுதல், பஸார்களிலும் வீதிகளிலும் கூட்டம் கூட்டமாக நிற்றல், சத்தமிடுதல், பொதுப் போக்குவரத்துக்கும் பொதுமக்களின் நடமாட்டத்திற்கும் இடையூறு விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட அனைத்து வீணான காரியங்களில் இருந்தும் அல்லாஹ்வுக்காக தவிர்ந்து கொள்ளுங்கள்.

அத்துடன் மோட்டார் சைக்கிள்களை வேகமாக செலுத்துவதையும் ஹெல்மெட் இன்றி செல்வதையும் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு பேருக்கு மேல் சேர்ந்து பவணி செல்வதையும் தயவு செய்து தவிர்ந்து கொள்ளுங்கள்.

எம்மால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு செயற்பாடும் பொதுமக்களுக்கும் பிற சமூகத்தினருக்கும் எந்த விதத்திலும் இடையூறு விளைவிப்பதாகவோ அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவதாகவோ அமைந்து விடக்கூடாது என்பதில் எமது இளைஞர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.

இக்காலப்பகுதியில் போக்குவரத்து பொலிஸாருக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குங்கள்.

இவற்றைக் கவனத்தில் கொள்ளாமல் செயற்பட்டு ஏதாவது ஒரு தவறுக்கு யாராவது பாதுகாப்பு தரப்பினரின் நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டால் எம்மால் பொறுப்புக் கூற முடியாது என்பதையும் அறியத்தருகின்றேன்.

ஆகையினால் தமது பிள்ளைகள் எங்கே என்ன செய்கிறார்கள் என்பது தொடர்பில் பெற்றோர்கள் மிகவும் அவதானமாக இருந்து கொள்ளுங்கள்.

அதேவேளை இந்நாட்டு முஸ்லிம்கள் பாதுகாப்பு மற்றும் இனவாத நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கின்ற இந்த இக்கட்டான சூழ்நிலையில் இப்பெருநாள் சந்தோசமாகக் கொண்டாட வேண்டியதொன்றல்ல என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

ஆகையினால் பாதுகாப்பு தரப்பினரின் அறிவுறுத்தலின் பேரில் என்னால் விடுக்கப்படுகின்ற இந்த அன்பான வேண்டுகோளை ஏற்று செயற்படுவீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

அனைவருக்கும் முன்கூட்டிய பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

No comments:

Post a Comment