மருத்துவ மற்றும் தாதிச் சேவைகளிலுள்ளவர்கள் வெளிநாடு செல்வதால் தேசிய தேவையை பூர்த்திசெய்ய முடியாத நிலைமை - News View

About Us

About Us

Breaking

Monday, June 3, 2019

மருத்துவ மற்றும் தாதிச் சேவைகளிலுள்ளவர்கள் வெளிநாடு செல்வதால் தேசிய தேவையை பூர்த்திசெய்ய முடியாத நிலைமை

மருத்துவ மற்றும் தாதிச் சேவைகளிலுள்ளவர்கள் வருடாந்தம் வெளிநாடு செல்வதால் நாட்டின் மருத்துவர்கள், மற்றும் தாதியர்களின் எண்ணிக்கை தேசிய தேவையை பூர்த்தி செய்துகொள்வதற்கு போதுமானதாக இல்லை. இந்தப் பிரச்சினை குறித்து அனைவரும் துரிதமாக கவனம் செலுத்த வேண்டமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (02) நடைபெற்ற இலங்கை அவசர மருத்துவ நிபுணர்கள் கல்லூரியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். 

ஜனாதிபதி மேலும் கூறுகையில், இலங்கை அவசர மருத்துவ நிபுணர்கள் கல்லூரியின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைகளுக்கான நிகழ்ச்சித் திட்டங்கள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். 

சிகிச்சை பிரிவுகளை பலப்படுத்துவதற்காக வருடாந்தம் வரவு செலவு திட்டத்தின் மூலம் பாரிய நிதி ஒதுக்கப்பட்டு, அத்துறை பலப்படுத்தப்பட்டபோதும் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைகளுடன் தொடர்புடைய நிகழ்ச்சித்திட்டங்கள் போதுமானதாக இல்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 
அவசர சிகிச்சைக்கான விசேட மருத்துவர்களின் ஒன்றியமொன்று உருவாகியிருப்பது மிகவும் முக்கியமானதும் காலத்திற்கேற்ற நடவடிக்கையுமாகும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

இலங்கை அவசர மருத்துவ நிபுணர்கள் கல்லூரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சராக இருந்தபோது 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், இந்த கல்லூரியின் மூலம் சுகாதார அமைச்சின் ஒருங்கிணைப்புடன் சிங்கப்பூர், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் வைத்தியசாலைகளுடன் இணைந்து தற்போது சுமார் 300 செயலமர்வுகள் நடத்தப்பட்டு மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்கு பல்வேறு வெளிநாட்டுப் பயிற்சிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இச் சங்கத்தின் தலையீட்டில் 2016ஆம் ஆண்டு திடீர் விபத்துகள், அவசர சிகிச்சைக்கான தேசிய கொள்கை தயாரிக்கப்பட்டது. மேலும் சிகரெட், மதுபான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததன் மூலம் அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு வரும் இருதய நோய்கள், திடீர் விபத்துக்கள் போன்றவற்றிற்கு காரணமாக அமையும் சிகரெட் மற்றும் போதைப்பொருட்களை தவிர்ப்பதற்கு பங்களிப்பு செய்துள்ளது. 
மருத்துவ மற்றும் தாதிச் சேவைகளிலுள்ள பெரும் எண்ணிக்கையானோர் வருடாந்தம் வெளிநாடுகளுக்கு சென்று விடுவதன் காரணமாக நாட்டின் மருத்துவர்கள் மற்றும் தாதியர்களின் எண்ணிக்கையானது தேசிய தேவையை பூர்த்தி செய்துகொள்வதற்கு போதுமானதாக இல்லை என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த பிரச்சினை குறித்து அனைவரும் துரிதமாக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார். 

அவசர சிகிச்சை விசேட வைத்தியர்களின் சேவையை பாராட்டி 11பேருக்கு ஜனாதிபதி விருது வழங்கியதுடன், இலங்கை அவசர மருத்துவ நிபுணர்கள் கல்லூரியின் புதிய இணையத்தளத்தையும் ஆரம்பித்து வைத்தார். 

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹெனா சிங்கர், சுற்றாடல் போசணை சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சந்திரிக்கா விஜேவர்தன, பேராசிரியர் காலோ பொன்சேகா, விசேட மருத்துவ நிபுணர் அனுருத்த பாதனிய, விசேட மருத்துவ நிபுணர் இந்திக லெனரோல், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment